வீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும்! – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு போடப்படாத ஒவ்வொரு புள்ளடியும், கோட்டாபய அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தும். இந்த விபரீதத்தை அறியாது, வரப்போகும் பெரும் ஆபத்தை உணராது எமது மக்கள் இருப்பது துன்பகரமானது. மக்கள் வாக்களிக்காமல் ஒதுங்குவதும், கூட்டமைப்புக்கு வாக்களிக்கத் தவறுவதும், ராஜபக்சக்களுக்கு கட்டுக்கடங்காத அதிகாரத்தை அள்ளி வழங்கி தமிழர்களை மீண்டும் இருண்ட யுகத்தில், அதலபாதாளத்தில் தள்ளும் நடவடிக்கையாக மாறிவிடக்கூடும். தமிழ் மக்கள் தங்கள் கைகளாலேயே தங்கள் கண்ணைக் குத்திக் கொள்ளப் போகின்றனரா? இல்லை தாயகத்தைக் காக்கப் போகின்றனரா?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஈ.சரவணபவன்.
யாழ்.ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ராஜபக்சக்கள் பௌத்த – சிங்களப் பேரினவாதத் தீயை தெற்கில் மூட்டியிருக்கின்றனர். அந்தத் தீயில் தமிழ் மக்களும் எரிந்து பொசுங்கப் போகின்றார்களா? இல்லை அதை எதிர்த்துப் போராடப் போகின்றார்களா? தமிழ் மக்கள் எதிர்வரும் புதன்கிழமை நடக்கின்ற போரில் தங்கள் வாக்கு ஆயுதத்தால் எதிரியைச் சரிக்க வேண்டும்.
தமிழர் தாயகத்தில் தனிப் பெரும் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப்புக்கு போடப்படாத ஒவ்வொரு புள்ளடியுமே, ராஜபக்சக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் மக்களே போடும் புள்ளடிகளாக மாறும்.
மாற்றம், மாற்றுத் தலைமை, மாற்று அணி என்ற கோசங்களோடு பலர் தேர்தல் களத்தில் இருக்கின்றார்கள். மக்களே இறுதித் தருணம் இது. பொறுமையாக நடந்தவற்றை எண்ணிச் சிந்தித்துப் பாருங்கள். 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மாற்றுத் தலைமை, மாற்று அணி என்ற கோசங்கள் ஒலித்தன. அந்தப் போலிக் கோசங்களின் பின்னாலும் சில மக்கள் இழுபட்டுச் சென்றார்கள். அதன் விளைவு என்ன?
மாற்று அணியினர் என்று சொல்லிக் களமிறங்கியவர்கள் தாங்களும் ஆசனத்தைக் கைப்பற்றவில்லை. மாறாக கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய ஆசனத்தை சிங்களப் பேரினவாதக் கட்சிக்கு தாரைவார்த்தனர். உண்மையில் மாற்றம் என்ற போர்வையில் உள்ளவர்களின் திட்டம் அதுதான். தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து, சிங்களப் பேரினவாதக் கட்சிகள் எங்கள் தாயக மண்ணில் காலுன்ற வைப்பதையே அவர்கள் மாற்றம் என்று நினைக்கிறார்கள்.
இந்தத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆனால், எங்கள் நாட்டின் விகிதாசார தேர்தல் முறைமை காரணமாக, இந்த மாற்றம் என்று சொல்லிக் கொள்வோர் கூட்டமைப்பிடமிருந்து பிரித்தெடுக்கும் ஒரு சில ஆயிரம் வாக்குகள் காரணமாக, கோட்டாபயவின் ஏவலாளிகளான டக்ளஸ், அங்கஜன், சந்திரகுமார் போன்றோர், தமிழ் மக்களின் வாக்குகளாலேயே வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கினால், அது கோட்டாபய அரசு வெற்றி பெறுவதற்குச் சமமானது. எந்தக் கோட்டாபயவுக்கு எதிராக 10 மாதங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தார்களோ, அதே கோட்டாபய மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இடமளிக்கப் போகின்றீர்களா?
அவ்வாறு கோட்டாபய மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டால் என்ன நடக்குமென்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குச் செல்லும். ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி மீண்டும் மலரும். வெள்ளை வான் கடத்தல் நடக்கும். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது கடத்தப்படுவார்கள். ஊடகங்கள் முடக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நசுக்கப்படும்.
ஒட்டுமொத்த நாடும் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும். இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலைமைதான் தோன்றும். இவையெல்லாம் கடந்த காலப் பட்டறிவுகள்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று 13ஆவது திருத்தம், 19ஆவது திருத்தம் என்பவற்றை இல்லாதொழிக்கப் போவதாக ராஜபக்சக்கள் இப்போதே சொல்லியிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாட்டில் இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கலும் இல்லாமலாக்கப்பட நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா?
ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்து நின்ற ஒரே தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அந்தத் தேர்தலில் கோட்டாபயவுக்கு எதிராக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் போடப்பட்டன. அதே உத்வேகத்துடன் கோட்டாவுக்கு எதிராக வாக்களித்த 3 இலட்சத்து 20 ஆயிரம் பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் 7 ஆசனங்களையும் நாம் கைப்பற்ற முடியும். அதன் மூலம் தமிழர்கள் அனைவரும் இனப்படுகொலையாளியான கோட்டாபயவை எதிர்க்கிறோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கும் உரக்கச் சொல்லமுடியும். ஆகவே, கோட்டாபயவின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு இங்கிருந்து ஒரு வாக்கும் போடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வீட்டுச் சின்னத்தில் வாக்களிக்க தமிழ் மக்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்” – என்றார்
கருத்துக்களேதுமில்லை