கூட்டமைப்பு தேசியப் பட்டியல் யாருக்கு?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
இப்பதவியை அம்பாரை மாவட்;டத்திற்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் பல கட்சிகளின் ஊடுருவலால் சுமார் 26000 வாக்குகளை மாத்திரமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் பெற முடிந்தது. இதனால் மாவட்டத்திற்கான தமிழ்ப்பிரதிநிதித்துவம் தற்போது இழக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து மூவரும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து மூவரும் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலிருந்து ஒருவரும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திலிருந்து இருவருமாக 9 உறுப்பினர்களும் தேசியப்பட்டில் மூலம் ஒருவருமாக 10 உறுப்பினர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூலம் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் திகாடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து துரதிஸ்டவசமாக ஒரு பிரதிநிதியினையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க அம்பாரை மாவட்டம் 52 தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாவட்டமாகவும் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினைகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகவும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டும் இதுபோன்றதொரு நிலை அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டு பாரிய பின்னடைவுகளை தமிழ் சமூகம் சந்தித்ததோடு இன்றுவரை தீர்வு காண முடியாத பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் மாவட்டமாகவும் காணப்படுகின்றது.
இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாரை மாவட்டத்திற்கே இம்முறை வழங்கி மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனும் நம்பி;க்கை இங்கு வாழும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இல்லாதுபோனால் எதிர்காலத்தில் அம்பாரையில் பல மாற்றங்கள் உருவாவதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை