9ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வு: எளிய முறையில் விழாவை நடத்தவும் – ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்து…
நாளை 9 ஆவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகின்றது. இந்தநிலையில், பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒரு எளிய முறையில் கன்னி அமர்வு விழாவை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, வழக்கமாக இடம்பெறும் மரியாதை வேட்டுகள் தீர்த்தல், இராணுவ மரியாதை உள்ளிட்ட விடயங்கள் இம்முறை இடம்பெற மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இம்முறை கலாசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நடனக் குழுக்கள், மேள தாள வாத்தியங்களுடன், நாடளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நாளை 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார். அரசின் கொள்கை அறிக்கையை முன்வைத்து, ஜனாதிபதி தனது நாடாளுமன்ற உரையை பிற்பகல் 3.30மணிக்கு நிகழ்த்தவுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு, ஶ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்தின் கூட்ட மண்டபத்தில் கூடுமாறு ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை முதன் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள 60 க்கும் மேற்பட்டோருக்கு 03 நாள் செயலமர்வொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவல இது தொடர்பில் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்ற வரலாறு, நிலையியல் கட்டளைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, மீண்டும் சபை முதல்வராகவும், ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை