மிதக்கும் சந்தை புனரமைக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் கையளிக்கப்படும்
கொழும்பு மிதக்கும் சந்தையை புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டுஓகஸ்ட் 25ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு மிதக்கும் சந்தைத் தொகுதியை பார்வையிடுவதற்காகவும் அதனை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கிலும், நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.
இந்தத் திட்டம், அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இந்தத் திட்டத்துக்காக ரூபா 312 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. முறையாக பராமரிக்கப்படாமல் காணப்பட்ட, இதனை மீண்டும் நவீன மயப்படுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டத்தின் மூல திட்டத்துக்கு அமைய, எஞ்சியுள்ள திட்டத்தை மிக விரைவாக பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை