கனடியத் தமிழர் பேரவையின் ‘ தமிழர் தெரு விழா 2020’
அன்புடையீர்,
கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது. கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ‘ தமிழர் தெரு விழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் ‘தெருவிழா 2020’ கொண்டாட்டத்தை உங்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டுவருகிறது.
இதற்கமைய ‘ தமிழர் தெரு விழா 2020’ எதிர்வரும் சனிக்கிழமை ஒகஸ்ட் 29ஆம் திகதி (29-08-2020) காலை 10:30 மணிக்கு இணையத்தில் தொடங்கி வைக்கப்படும். அதன்பின், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர தெருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் பிற்பகல் 2:30 வரை நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் கொண்டுவரப்படும். அதேபோல இரண்டாம் நாள் நிகழ்வுகளும் ஞாயிற்றுக் கிழமை 30-08-2020 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2:30வரை தொடரும். இரண்டாவது தினத்தன்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை இணையம் வழியாகக் கவர்ந்திழுக்கும்.
கனடியத் தமிழர் பேரவை தரும் தெரு விழாவின் பெரும் சிறப்பே தமிழின் சிறப்புகளைச் சொல்லும் நிகழ்வுகளை தமிழர்களும், தமிழரல்லாதவர்களும் பிரமித்துப் பாராட்டும் வகையிலிருக்குமாறு மேடைக்குக் கொண்டு வருவதாகும். அவ்வகையில் இவ்வாண்டிற்கான சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையிலிருந்து கம்பன் கழகத்தின் ‘கம்பவாரிதி’ ஜெயராஜ் அவர்களும் தமிழகத்திலிருந்து தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் வணக்கத்துக்குரிய ஜெகத் காஸ்பர் அடிகளார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். அத்துடன் இம்முறையும் தமிழ்பண்பாட்டை வெளிக்காட்டும் நடனங்கள் மற்றும் அனைவரையும் ரசிக்க வைக்கும் கலை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மெல்லிசை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவரவிருக்கின்றன.
தெருவிழாவின் முதல்நாளான சனிக்கிழமை ‘மெகா ரியூனேர்ஸு’டைய இன்னிசை நிகழ்ச்சி பிற்பகல் 2:30வரை இசை ரசிகர்களை மெய்மறக்க வைக்கும். இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ‘அக்னி இசைக்குழு’வின் இன்னிசை நிகழ்ச்சி பிற்பகல் 2:30 வரை தொடரும். வழக்கம் போல இம்முறையும் உங்கள் அபிமானத்திற்குரிய தமிழக, ஈழத்து, கனேடிய பாடகர்கள் தெருவிழா மேடையில் இணையவிருக்கிறார்கள்.
அதற்கமைய இவ்வாண்டு தமிழகத்திலிருந்து பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிசரண் ஆகியோருடன் ஈழத்துப்பாடகர்கள் ஜெயந்தன் கந்தப்பு, பிரதா கந்தப்பு மற்றும் கனடாவின் பாடகர்களான ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஜெசிக்கா ஜூட் மற்றும் சின்மய் ஆகியோர் உங்களை தமது குரல்களால் மயக்க வருகிறார்கள். பிற நிகழ்ச்சிகள் வரிசையில் கனடிய இளங்கலைஞரான சுருதி பாலமுரளியின் இனிய இசை மற்றும் ஆதவன், சந்தியாவின் நகைச்சுவை என பல்வேறு மனங்கவர் நிகழ்ச்சிகள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் இவ்வாண்டும் தமிழர் தெருவிழாவில் தமிழ் வளர்ச்சிக்கான பங்களிப்பும், தாயக உறவுகளுக்கான ஆதரவும் இருக்கும். இம்முறை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை உருவாக்கும் முயற்சியும், ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளும் ‘ தமிழர் தெரு விழா2020’ கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதால் உங்கள் அனைவரதும் ஆதரவை கனடியத் தமிழர் பேரவை பணிவுடன் நாடி நிற்கிறது.
தமிழர் தெரு விழா 2020யின் புது அனுபவத்திற்கு நீங்கள் tamilfest.ca என்ற இணையத்தளத்தில் பார்த்து மகிழலாம். மேலும் உங்கள் Facebook மற்றும், Youtube ஊடாகவும் நிகழ்ச்சிகளை நேரலையாக கண்டு களிக்க முடியும். நிகழ்ச்சிகளுக்கான இணைப்புக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
Facebook : https://www.facebook.com/tamilfestTO/posts/2762400487418606
Youtube : https://youtu.be/su83yB0xl4s
உங்கள் கணணி, கைத்தொலைபேசி அனைத்திலும் தெருவிழா 2020 வந்து உங்களை எதிர்வரும் சனி ஞாயிறு தினங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவைக்கப்போகிறது..
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 29 திகதியான சனிக்கிழமையும், 30ந் திகதியான ஞாயிற்றுக்கிழமையும் ஒரு புது அனுபவத்தின் ஊடாக தமிழையும் தமிழ்க் கலை கலாச்சாரத்தையும் உலகம்வாழ் தமிழர்களோடு இணையவழி இணைந்து நின்று கொண்டாட ‘தமிழர் தெருவிழா 2020’க்கு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது.
நன்றி
அன்புடன்
டன்ரன் துரைராஜா
நிர்வாக இயக்குனர்,
கனடியத் தமிழர் பேரவை
கருத்துக்களேதுமில்லை