ஐ.தே.கவில் சிறந்த தலைவர் தெரிவானால் கூட்டணி உறுதி – சஜித் அணி பகிரங்க அறிவிப்பு!!!!!!

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குத் துணைபோகாத சிறந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவருடன் கூட்டணி அமைத்துச் செயற்படுவோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐ.தே.க. பெயரளவிலான கட்சியாக மாத்திரமே இருக்கின்றது. அதனால் மோசடி குற்றச்சாட்டுக் அற்றவர்கள் எம்முடன் இணைந்து செயற்படலாம்” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய மக்கள் எமக்கு ஓர் ஆணையை வழங்கியுள்ளனர். அதன்படி செயற்படுவதற்கே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார். அதனையே நாங்களும் விரும்புகின்றோம்.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியினூடாகவே நாங்கள் போட்டியிடுவோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் அக்கட்சிக்குள் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று கூறப்படுகின்றது. இதற்காகக் கட்சியில் எஞ்சியிருக்கும் பலரது பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் அக்கட்சியின் உறுப்பினர்களே முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அந்த விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்த விரும்பவில்லை.

ஐ.தே.கவின் தலைமைத்துவப் பொறுப்பு யாருக்குக் கிடைத்தாலும் அவர் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குத் துணைபோகாத சிறந்த நபராக இருப்பாராயின் அவருடன் கூட்டணி அமைத்துச் செயற்படுவோம்.

பொதுத்தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே சின்னத்தையும், பெயரையும் மாத்திரம் கொண்ட கட்சியாகவே காணப்படுகின்றது. அதனால் அந்தக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிறந்த நபர்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.
…………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.