ரோஹிங்கியா இனப்படுகொலையை ஐ.நா. முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மனித உரிமை அமைப்பின் கோரிக்கை…
மியான்மரில் நிகழும் ரோஹிங்கியா இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளது மலேசியாவில் இயங்கும் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு. ஐ.நா. பொது சபையின் 75வது கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், இக்கோரிக்கையினை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, தென்கிழக்காசீய நாடுகளின் கூட்டமைப்பு, உலக நாடுகள் மற்றும் ஐ.நா. உள்ளிட்டவை ரோஹிங்கியா விவகாரம் குறித்த அழுத்தத்தை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கொடுக்க வேண்டும் என இந்த மனித உரிமைப்பு முறையிட்டுள்ளது.
1. மியான்மரில் ரோஹிங்கியா இனத்தினர் மீதும் இன்னும் பிற இனக்குழுக்கள் மீதும் மியான்மர் அரசு நடத்தும் இனப்படுகொலையை தடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
2. மியான்மரில் ரோஹிங்கியாக்களை குடியுரிமைக் கொண்டவர்களாக அங்கீகரிக்க மியான்மர் ராணுவ அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. மியான்மரின் அரக்கன் மாநிலத்தில் மனித உரிமை மீறல்களை நிறுத்தவும் கண்காணிக்கவும் ஐ.நா. அமைதிப்படையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனுப்ப வேண்டும்.
4. சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மருக்கு எதிராக வழக்கிட்டுள்ள காம்பியாவுக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
5. இனப்படுகொலை அல்லது முரண்பாடு முடிவுறும் வரையிலும் ரோஹிங்கியாக்கள் மியான்மர் குடியுரிமைக் கொண்டவர்களாக அங்கீகரிக்கப்படும் வரையிலும் மியான்மருடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்.
6. ரோஹிங்கியாக்களுக்கு உணவு, மருத்துவம், மற்றும் தங்குமிட உதவிகளை வழங்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்பட வேண்டும்,
7. ரோஹிங்கியாக்களை ‘பெங்காலி’ என அடையாளப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை மலேசியாவில் இயங்கும் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு (Myanmar Ethnic Rohingya Human Rights Organisation Malaysia) விடுத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை