சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதியினை மையப்படுத்தி அமெரிக்க வெளியுறவுச் செயலர் பொம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விடயத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2020க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பது போல், சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் நிலை என்பது, இந்தியப் பெருங்கடலுக்குள் அதிகார நீட்சிக்கு இத்துறைமுகதளத்தை சீனம் இராணுவ நோக்கில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதவுரிமை மீறல்களிலும், சுற்றுசூழலை வலிந்து அழிவுப்பதிலும், சீனத்தின் நடத்தை என்பது உலகறிந்த விடயம் என்பதும்,  சீனம் இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிய அச்சம் அறிவார்ந்த ஒன்றெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்தச் சிக்கல்களைக் கவனிக்க உங்கள் பதவிப் பொறுப்பின் அதிகாரத்தையும் விருப்புரிமையையும் பயன்படுத்துவது குறித்துக் கருதிப் பார்க்கும் படி சிறிலங்காவுக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், ஹம்பாந்தோட்ட துறைமுகத்தைச் சீனம் பயன்படுத்திக் கொள்ளல் ஆகிய வியடங்களில் சிறிலங்காவை நேரடியாக கேள்விக்குட்படுத்துமாறு கோரியுள்ளது.

மேலும் அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கு எழுதிய கடித்தில், இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, 70 000க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, சிறிலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நம்பத்தக்க சான்றுகள் இருப்பதாக, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் அமர்த்திய வல்லுநர் குழு அறிக்கையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் 2015ம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் தந்த சிறிலங்கா பற்றிய புலனாய்வு (OISL) அறிக்கையில் முதன்மையாக சிறிலங்கா அரசு அமைப்புசார் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிகாட்டியுள்ளார்.

இதேவேளை அமைதிக்கும் நீதிக்கும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆகச் சிறந்த தீர்வாக, ஸ்காட்லாந்திலும், எரித்ரியாவிலும், கொசாவோவிலும் நடத்தப்பட்டது போல் தமிழர்களுக்கான ஒரு பொதுவாக்கெடுப்பே என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நம்பிக்கை என சுட்டிக்காட்டிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், இந்தியப் பெருங்கடலின் புவிசார் கேந்திரமாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியின் 700 கிலோ மீற்ற்ர் கடலோரப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான வேணவா நியாயமானது, செல்லத்தக்கது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளமை அமெரிக்காவின் இந்தியப் பெருங்கடல் அரசியலின் முக்கியமான விடயமாக உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.