இலங்கை வர முன் சீனாவுக்கு எதிராக மைக் பொம்பியோ ருவிட்டரில் கருத்து…
இலங்கை வர முன் சீனாவுக்கு எதிராக
மைக் பொம்பியோ ருவிட்டரில் கருத்து
சீனாவுடன் கடும் முறுகல் நிலையில், பீஜிங்குக்கு எதிராகக் கடும் வாசகங்களில் அடங்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டபடி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்றிரவு கொழும்பு வந்து சேர்ந்தார். அவர் கொழும்பு வருவதற்கு முன்னர் தமது ருவிட்டர் பக்கத்தில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் பெரும் அச்சுறுத்தல் என்ற குறிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்று கொழும்புக்கு வரமுன்னர், நேற்றுமுன்தினம் அது குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையில், இலங்கைக்குத் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வரவேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்து சீண்டும் விதத்தில் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
இலங்கையை ஒட்டி அமெரிக்க – சீனப் பனிப்போர் ஒன்று கட்டவிழும் சூழ்நிலையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் கொழும்பு வருகை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு தாம் கொழும்பு வந்து சேர்வதற்கு முன்னர் தாம் வெளியிட்ட ருவிட்டர் குறிப்பில்,
“சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் நிஜத்தில் பெரும் அச்சுறுத்தல். சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ அதே மாதிரித்தான் சீனாவும் செயற்பட வேண்டும் எனக் கோருகின்றோம்” – என்று சாரப்பட தெரிவித்திருந்தார்.
இலங்கையைத் தளமாக – களமாகக் கொண்டு அமெரிக்க – சீன கருத்து மோதல் பகிரங்க வெளிப்பாடாக வெடித்திருக்கின்றமை கொழும்புக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை