பல்கலைக்கழக அனுமதி : மேலதிகமாக 10,000 பேருக்கு சந்தர்ப்பம் – மேன்முறையீடு செய்ய கோரிக்கை

நாட்டில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு இந்த வருடத்தில் இணைத்துக்கொள்ளப்படும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும்.

இவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த வருடத்தில் பல்கலைக்கழக பிரவேசத்தில் உள்வாங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சமிக்க நாடு என்ற தொலைநோக்கின் கீழ் இம்முறை 41,500 மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதற்கமைவாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை மருத்துவ பீடத்திற்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடத்திற்கு 405 மாணவர்களும், சட்ட பீடத்திற்கு 126 மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தொழில்நுட்ப பீடத்திற்கு 350 மாணவர்களும் என்ற அடிப்படையில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

முகாமைத்துவ பீடத்திற்காக 900 மாணவர்களும், கலைப்பீடத்திற்காக 815 மாணவர்களும், விவசாயம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்காக 6,000 மாணவர்களும் இம்முறை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்; சம்பத் அமரதுங்க பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான மேல் முறையீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ (www.ugc.ac.lk) இணையத்தளத்தின் ஊடாக அல்லது appeals@ugc.ac.lk  என்ற மின்னஞ்சல் முலம் சமர்பிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைவாகவும் முடிந்த வரையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கொள்கைக்கு அமைவாகவும் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்ள நாம் நடவடிக்கை மேற்கொண்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.