அமெரிக்காவின் வேட்டை பற்களை கழட்டுவதென்றால் யார் வெற்றிபெற வேண்டும் ? இஸ்லாமிய உலகிற்கு ஆபத்துகுறைந்தவர் யார் ?
உலகம் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்கா என்னும் உலக சண்டியனின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதாகும்.
கருத்துக் கணிப்புக்களில் இன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகின்ற ஜோ வைடன்தான் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகின்றது. இதுபோல் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஹிலரி கிளிண்டன் வெற்றிபெறுவார் என்றுதான் கருத்துக் கணிப்புக்கள் கூறியது. ஆனால் ரொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார்.
இஸ்லாமிய உலகை பொறுத்தவரையில் யார் வெற்றி பெற்றாலும் யூதர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் பாரியளவில் மாற்றங்கள் வரப்போவதில்லை.
அத்துடன் உலகில் பல மில்லியன் கணக்கான முஸ்லிம்களை கொலை செய்தும், அகதிகளாக்கியும், இஸ்லாமிய நாடுகளை சிதைவடைய செய்த அமெரிக்காவுக்கு நேரடியாக பதிலடி வழங்க முடியாதுபோனாலும், அதன் ஆட்சி தலைவர்கள் மூலமாக பலத்தை அழிக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
இஸ்லாமிய உலகை பிரித்தாள்வதிலும், மத்திய கிழக்கில் இஸ்ரேலை முன்நிறுத்தியும் பாலஸ்தீன பிரச்சினையில் ஓர வஞ்சனையுடன் இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டிலுமே அமெரிக்கா உள்ளது.
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கொள்கையிலிருந்து எந்தவொரு ஜனாதிபதியும் பின்வாங்கப் போவதில்லை.
அதுபோல் இஸ்லாமிய நாடுகளுக்கு படையை அனுப்புவதிலும், புதிதாக தாக்குதல் நடாத்திவிட்டு அதனை அமெரிக்க மக்களிடம் வெற்றி செய்தியாக காண்பிப்பதிலும் அனைத்து ஜனாதிபதிகளும் ஒரே கொள்கையினேயே பின்பற்றினர்.
ஆனால் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலம் மிகவும் வித்தியாசமானது. அதாவது அமெரிக்கவை சர்வதேச ரீதியில் கோமாளியாக மாற்றியதுடன், செல்வாக்குகள் குறைந்துகொண்டு செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது.
அமெரிக்கா சண்டைக்கு செல்லும்போது தனது நண்பர்களான ஐரோப்பா, மற்றும் நேட்டோ நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்றுதான் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்துவது வழமை.
ஆனால் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் ஐரோப்பாவுடனும், நேட்டோவுடனும் முரண்பாடுகளையும், கசப்புணர்வுகளையும் அமெரிக்கா சம்பாதித்தது. இது முஸ்லிம் உலகிற்கு பாரிய வெற்றியாகும்.
பொருளாதார போர் என்றவகையில் சீனாவுடன் நேரடியாக முரண்பட்டுக்கொண்டு தென்சீனா கடல் பக்கம் தனது முழு பார்வையினையும் செலுத்தியது. இது இஸ்லாமிய நாடுகளுக்கு சற்று ஆறுதல் தருகின்றது.
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீது கடந்த வருடம் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடாத்தியிருந்தும் ஈரானுக்கு எதிராக ஜனாதிபதி ட்ரம் இராணுவ நடவடிக்கைக்கு செல்லவில்லை. ஆனால் வேறு ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஈரான் விடயத்தில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம்.
அத்துடன் ட்ரம்பின் ஆட்சியில் எந்தவொரு இஸ்லாமிய நாட்டுக்கும் புதிதாக படைகளை அனுப்பவுமில்லை, பாரிய தாக்குதல்கள் நடாத்தவுமில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து படைகளை குறைப்பு செய்தார்.
அத்துடன் அமெரிக்காவுடன் பதினெட்டு வருடங்களாக போர் செய்த பரம எதிரியான தாலிபான்களுடன் கட்டாரின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி போர்நிறுத்தத்தை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தாலிபான் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகின்ற ஜோவைடன் தீவிர போக்குடையவர். அவர் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் சரிந்துகிடக்கின்ற அமெரிக்காவின் செல்வாக்கை ஜோ வைடனால் நிமிர்த்தி மீண்டும் இஸ்லாமிய நாடுகளில் புதிதாக படைகளை அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது.
எனவே கோமாளித்தனமான இன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வெற்றிபெற்றால் அமெரிக்காவின் செல்வாக்குகள் இன்னும் குறைவடைவதோடு, ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக அமெரிக்க படைகள் வெளியேறும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
கருத்துக்களேதுமில்லை