நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்………

நேற்று இடம்பெற்ற( 02020.12.07 )அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. ஏற்றுமதிச் சந்தைக்கான அரை வார்ப்பு றேடியல் ரயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் ரயர் உற்பத்திக்கான கருத்திட்டம் 

ஏற்றுமதிச் சந்தைக்கான அரை வார்ப்பு றேடியல் ரயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் ரயர் உற்பத்தி செய்வதற்காக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக சீனா  Shandong Haohua Tire Co. Limited  இனால் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுக் கருத்திட்டமொன்று முதலீட்டுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) மூலோபாய அபிவிருத்தித் திட்டமாகக் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 36 மாதங்களில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் மொத்த உற்பத்தியில் ஆகக் குறைந்தது 80% அளவு ஏற்றுமதி செய்வதற்கும் மூலோபாய  அபிவிருத்தித் திட்ட சட்ட ஏற்பாடுகளுக்கமைய வரிச் சலுகை வழங்குவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்தல் 

கீழ்க்காணும் வர்த்தமானி அறிவித்தல்கள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(i). 2011 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச்சட்டத்தின் கீழ் :

  • 2020 செப்தெம்பர் மாதம் 02 ஆம் திகதிய 2191/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்
  • 2020 அக்டோபர் மாதம் 23 ஆம் திகதிய 2198/57 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்
  • 2020 அக்டோபர் மாதம் 26 ஆம் திகதிய 2199/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்
  • 2020 நவம்பர் மாதம் 28 ஆம் திகதிய 2203/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

(ii) 1989 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் :

  • 2020 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதிய 2189/47 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்
  • 2020 அக்டோபர் மாதம் 12 ஆம் திகதிய 2197/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

(iii) 2003 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2020 செப்தெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 2194/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

(iv) 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்தித் திட்ட சட்டத்தின் கீழ்:

  • 2020 நவம்பர் மாதம் 10 ஆம் திகதிய 2201/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்
  • 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதிய 2202/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்
  • 2020 நவம்பர் மாதம் 24 ஆம் திகதிய 2203/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

03. மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக நிதியைப் பெற்றுக்கொள்ளல்

கொரோனா தொற்றுப் பரவலால் சுற்றுலாத்துறை முற்றாக செயலிழந்து போயுள்ளமையால், மத்திய கலாசார நிதியத்திற்கான வருமானம் குறைந்துள்ளது. இதற்கு முன்னரான அமைச்சரவை அங்கீகாரத்திற்கமைய நிதியத்தின் செயற்பாடுகளுக்காக 135 மில்லியன் ரூபாய்கள் கடனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், நிறுவனச் செயற்பாடுகளுக்காக குறித்த நிதி போதுமானதாக இல்லையென்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, குறித்த நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்குரிய செலவுச் சிட்டைகளுக்கான பணம் செலுத்துவதற்காக 50 மில்லியன் ரூபாய்களை திறைசேரியிலிருந்து பெறுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்காவின் அத்தியாவசிய மீள்கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் மறுசீரமைத்தலும்

உள்ளுர் சினிமா மற்றும் டெலி சினிமாத் துறைக்குத் தேவையான ஒளிப்பதிவுக் காட்சிக்கூட வசதிகள் மற்றும் குறித்த துறையின் நிபுணர்களுக்கான தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகளை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் உள்ளுர் சினிமா மற்றும் டெலி சினிமாத்துறையைப் புத்துயிரூட்டுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 13 சினிமா ஒளிப்பதிவுகளும், டெலி சினிமா தயாரிப்புக்கள் 18 உம், மற்றும் விளம்பரப் பாடல்கள் 08 உம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 04 வருடங்களில் இப்பூங்கா சரியான வகையில் பராமரிக்கப்படாததால், நிறுவனத்தின் பல்வேறு பௌதீக வளங்கள் அழிவடைந்து போகின்றது. அதனால், குறித்த டெலி சினிமா பூங்காவின் அத்தியாவசிய திருத்த வேலைகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அதற்காக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறைசேரியிலிருந்து நிதியொதுக்கீடு செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 1968 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க காணி அபிவிருத்தி செய்தல் இணைந்த சட்டத்தை திருத்தம் செய்தல்

1976 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க, 1982 ஆம் ஆண்டு 52 ஆம் இலக்க, மற்றும் 2019 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்ட 1968 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) இலங்கை காணி அபிவிருத்தி செய்தல் இணைந்த சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்காக 2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டமூல வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  குறித்த சட்டமூலத்திற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும் பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்தல்

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக்காக ஒரு கருத்திட்டத்திற்காக 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் வீதம் 04 கருத்திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளதுடன், குறித்த திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகின்றது. பயனாளிகள் குறித்த கட்டுமானப் பணிகளுக்கான செலவுகளைப் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்த பின்னர் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கும் முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் குறித்த பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவ்வாறு மேற்கொள்வதற்கு குறித்த பணத்தொகை பயனாளிகளிடம் இன்மையால், திட்டத்தின் முன்னேற்றம் மிகக் குறைவாகவேயுள்ளது. அதனால் வீடமைப்பு ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கும், அதன் பின்னர் கட்டுமானத்தின் முன்னேற்றத்திற்கமைய தவணைக் கொடுப்பனவுகளை விடுவிப்பதற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. சிறுவர்கள் செயலகத்தின் பெயரை ‘ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி தேசிய செயலகம்‘  எனத் திருத்தம் செய்தல்

1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ள ‘சிறுவர்கள் செயலகம்’ ஆரம்பப் பிள்ளைப்பருவப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் மத்திய நிறுவனமாக செயற்படுகின்றது. குறித்த நிறுவனம் ஆரம்பப் பிள்ளைப்பருவ கல்வித் துறைக்கு ஏற்புடைய வகையில் விசேட பணிகளை மேற்கொண்டாலும், நிறுவனத்தின் தற்போதைய பெயரில் அதுதொடர்பான வெளிப்பாடு காணப்படாமை தெரியவந்துள்ளது. அதனால், ‘சிறுவர்கள் செயலகம்’ ‘ஆரம்பப் பிள்ளைப்பருவ தேசிய செயலகம்’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. தேசிய பாடசாலைகளை 1000 வரை அதிகரித்தல் 

அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி புதிய 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்காக பொருத்தமான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை 2019 திசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்;கமைய, மூன்று கட்டங்களாகக் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதலாம் கட்டமாக தற்போது எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகள் 123 இல் ஒரு மாகாணசபை பாடசாலை வீதம் தெரிவு செய்து தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கும், இரண்டாம் கட்டமாக அடையாளங் காணப்படும் அளவுகோல்களுக்கமைய தெரிவு செய்யப்படும் 673 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உயர்த்துவதற்கும், மூன்றாம் கட்டமாக தற்போதுள்ள 373 தேசிய பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அரச சேவைக்காக நீண்டகால ‘மனிதவள அபிவிருத்தித் திட்டத்தை‘ தயாரித்தல்

அரச சேவையின் செயற்பாடுகள் மற்றும் விளைதிறனை அதிகரிப்பதற்காக துரித வேலைத்திட்டமாக மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதன் அவசியம் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களிலும் மனிதவள அபிவிருத்தி திட்டத்தைத் தயாரிக்கும் தேவையை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதிய 02/2018 இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மற்றும் விளைதிறனை அதிகரிப்பதற்காக குறித்த அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் நீண்டகால ‘மனிதவள அபிவிருத்தித் திட்டத்தை’  தயாரிப்பதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. லக்சல நிறுவனத்தின் செயற்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக நிதியைப் பெறல்

Covid – 19 தொற்றால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தராமையால் லக்சல விற்பனை நிலையங்களின் வருமானம் 90% வீதத்தினால் குறைவடைந்துள்ளமையால், நிறுவனத்தை நடாத்திச் செல்வதில் சிரமங்கள் தோன்றியுள்ளன. அதனால், லக்சல நிறுவனத்தை நடாத்திச் செல்வதற்குத் தேவையான ஊழியர்களுக்கான சம்பளம், மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகள் உள்ளிட்ட செயற்பாட்டு மூலதனத் தேவைகளுக்கான நிதியை திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பொலன்னறுவை பண்ணையில் 1000 ஏக்கரில் போசாக்குப் புல் சயிலேஜ் பேல் கருத்திட்டத்தை ஆரம்பித்தல்

தரமான தடித்த உணவுகள் இன்மையால் தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பாரிய பால் பண்ணைகளில் நிலவும் முக்கிய பிரச்சினையாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், பொதுவாக ஒரு பால் பசுவுக்கு உடற்திணிவின் 10% வீதம் தடித்த உணவுகள் வழங்கப்பட வேண்டும். அதற்குத் தீர்வாக தேசிய கால்நடைவள அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான பொலன்னறுவை பண்ணையில் 1000 ஏக்கரில் போசாக்குப் புல் சயிலேஜ் பேல் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக குறித்த பண்ணையில் 1000 ஏக்கர்களில் போசாக்கு சோளம் மற்றும் ஷோகம் பயிரிட்டு இயந்திரங்கள் மூலம் பேல் செய்யப்பட்ட சயிலேஜ் உற்பத்தி செய்வதற்கும், அதன் இரண்டாம் கட்டமாக 2000 பால் பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டு குறித்த பண்ணையில் தரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இக்கருத்திட்டத்திற்கான மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த மூலதன செலவில் 60% வீதம் அரச பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரித்தல்

உள்ளுரில் உற்பத்தி செய்யக் கூடிய பயிர்களை பயிரிட்டு இறக்குமதியைக் குறைப்பதற்காக 2020 ஆம் ஆண்டின் பெரும்போகச் செய்கையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம்’ தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. அதிக அறுவடையைப் பெறல் மற்றும் பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக தரமான விதைகளை விவசாயத் திணைக்களத்திற்கு மட்டும் விநியோகிப்பதற்கு இயலாமையால், விவசாயிகளுக்கான விதைகளை குறித்த பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான விவசாய திணைக்களம் மற்றும் மகாவலி பிரதேசங்களிலுள்ள விதை உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பல்லேகலவில் முன்மொழியப்பட்ட இராணுவ ஆதார மருத்துவமனைக்கான கட்டிடத்தை நிர்மாணித்தல் 

கண்டி மற்றும் அதனை அண்டிய மாவட்டங்களில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் இராணுவத்தினருக்கான அடிப்படை மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கண்டி பல்லேகல புதிய ஆதார மருத்துவமனையை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 03 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பதுடன், 376.22 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை இராணுவத்தின் பதவி நிலை தவிர்ந்த இராணுவ சிப்பாய்களின் உழைப்பைப் பயன்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள மருத்துவமனையை ஒரு வருடத்தில் பூர்த்தி செய்வதற்கும், அதற்குத் தேவையான நிதியொதுக்கீட்டை திறைசேரி மூலம் பெற்றுக்கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. சொயிசாபுர மீள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 30 வீடுகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் அமைத்தல்

சொய்சாபுர குடியிருப்புத் திட்டத்தில் அமைந்துள்ள பழுதடைந்த இரண்டுமாடி குறைந்த வாடகை வீடுகள் 48 உம், சட்டவிரோத குடிசைகள் 24 உம் மீளமைப்பதற்காக 20 வீடுகளைக் கொண்ட கட்டிடங்கள் 05 இனை அமைப்பதற்காக சொயிசாபுர மீள் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, 03 கட்டிடங்களில் 60 வீடுகளை அமைத்து குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. மிகுதி இரண்டு கட்டிடங்களில் 40 வீடுகளை முன்விற்பனைக் கொடுப்பனவு அடிப்படையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய 30 வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்க முடியுமெனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, சொய்சாபுர வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 550 சதுர அடி கொண்ட வீட்டு அலகுகள் 20 இனைக் கொண்ட  கட்டிடமொன்றும், 10 வீட்டு அலகுகள் கொண்ட கட்டிடமொன்றுமான 30 வீடுகளை முன்விற்பனைக் கொடுப்பனவு அடிப்படையில் நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. யக்கலவெரல்லவத்த மத்தியதர வகுப்பினருக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தல்

நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் யக்கல, வெரல்லவத்த பிரதேசத்தில் 500 வீடுகளைக் கொண்ட மத்தியதர வகுப்பினருக்கான வீடமைப்புத் திட்டம் 03 கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற் கட்டமாக 12 மாடிகளைக் கொண்ட 600 சதுர அடிகள் கொண்ட 132 வீட்டு அலகுகளும், 900 சதுர அடிகளைக் கொண்ட 22 வீட்டு அலகுகளுமாக 154 வீடுகளை அமைப்பதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 1,503.30 மில்லியன்கள் ஆவதுடன், கட்டுமானத்திற்கான செலவுகள் முன் விற்பனைத் தொகை மூலம் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கல்

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப மனிதவள அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கட்டிடம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்மாணித்து ஒப்படைத்தல் அடிப்படையில் சர்வதேச போட்டி முறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த ஒப்பந்தம் சன்கென் கன்ஸ்ரக்ஷன் தனியார் கம்பனிக்கு 3,624.96 மில்லியன் ரூபாய்களுக்கு (வட்வரி இல்லாமல்) வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. வகவத்த கிரீட் உப மின்நிலையத்திற்கான  132/33kv, 45MVA  மின்மாற்றிகள் இரண்டைப் பொருத்துதல் மற்றும் கண்காணிப்புக்கான ஒப்பந்தம் வழங்கல்

வகவத்த கிரீட் உப மின்நிலையத்திற்கான 132/33kv, 45MVA  மின்மாற்றிகள் இரண்டைப் பொருத்ததல் மற்றும் கண்காணிப்புக்கான ஒப்பந்தம் வழங்குவதற்காக சர்வதேச போட்டி முறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த ஒப்பந்தம்  M/s PT.CG.Power system  கம்பனிக்கு 245.62 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சியல்பலாண்டுவ 100 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை தனியார் துறையின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தல் 

சியம்பலாண்டுவ சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக தற்போது சாத்தியவள கற்கை அறிக்கை, காணி ஒதுக்குதல், சுற்றாடல் மதிப்பீடு போன்ற அடிப்படைப் படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக பின்பற்றப்பட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் நிதிப் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தியின் பங்களிப்புக் கிடைத்துள்ளது. பரிமாற்றல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பல்வேறு இயலளவுகளுக்கமைய மின்னலகு உற்பத்தி மற்றும் பரிமாற்றத்திற்காக குறைந்த மின்னலகுக் கொள்வனவுக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு 100 மெகாவாட் கொண்ட தனி மின்னுற்பத்தி நிலையம் மற்றும் பரிமாற்றல் வசதிகள் ஒரே பெறுகையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென குறித்த பகுப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை தனியார் துறையினரின் முதலீட்டின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக பரிமாற்றல் அனுமதிப்பத்திரம் கொண்ட இலங்கை மின்சார சபை மூலம் பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்கும், குறித்த கருத்திட்டத்தின் கீழ் மெதகம தொடக்கம் அம்பாறை வரையான தந்திக்கம்பி அமைத்தலை மின்சாரசபை மூலம் மேற்கொள்ளவும் மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. திருகோணமலை கிரீட் உப மின் நிலையத்திற்கான 10 ஆறு காற்றாலை மின்னுற்பத்தி ஒப்பந்தம் வழங்கல் 

மீள்புதிப்பிக்கத்தக்க மின்சக்திப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை, மன்னார், போலவத்த,மாதம்பே, மற்றும் கப்பல்துறை கிரீட் உப மின் நிலையங்களுக்காக 60 மெகாவாட் காற்று மின்வலுவை தேசிய மினவழங்கல் தொகுதிக்கு வழங்குவதற்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி முறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் தீர்மானக் குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலை கிரீட் உப மின் நிலையத்திற்கான 10 ஆறு காற்றாலை மின்வலுவை 20 வருடங்களுக்கு, மின்னலகு ஒன்று 14.52 ரூபாய்களுக்கு (14.52LKR/kWh) ஆக கொள்வனவு செய்வதற்கும், குறித்த மின்னுற்பத்தி நிலையத்தை பரிமாற்றல் வலையமைப்புக்கு தொடர்புபடுத்தி நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கபிடல் சிற்றி ஹோல்டிங்க் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.