நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் போராட்டம் !
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13)அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமே இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.
சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன, கொரோனா நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை வன்மையாகக்கண்டிக்கின்றோம்.
எனினும்,2021 ஜனவரி முதல் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அதனை விடுத்து தொழிலாளர்களை மீண்டும் ஏமாற்றும் விதத்தில் சம்பள உயர்வு இடம்பெறக்கூடாது என்று இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை