லங்கா பிரீமியர் லீக் தொடரை வெற்றிகொண்ட ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று 2020.12.16 இரவு வாழ்த்து தெரிவித்தார்.

பானுக ராஜபக்ஷவின் தலைமையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியுடன் சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், திசர பெரேரா தலைமையிலான ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகியது. கொழும்பு கிங்ஸ், காலி கிளேடியேட்டர்ஸ், தம்புள்ளை வைகிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், மற்றும் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகள் தொடரில் போட்டியிட்டிருந்தன.

ஆரம்ப சுற்றில் 20 போட்டிகளையும் அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகளையும் கொண்டமைந்திருந்த இம்முறை போட்டித்தொடரில் கலந்து கொண்ட அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதே கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் வெற்றிகரமாக போட்டிகளை ஏற்பாடு செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினர் ஆகியோருக்கும் கௌரவ பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இம்முறை லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் நாயகனாக ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் வனிது ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், இறுதி போட்டியின் நாயகனாக ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் சொயிப் மலிக் தெரிவானார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, கௌரவ இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.