நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக தமிழ்ப் பெண் சத்தியப்பிரமாணம்
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டிருந்தார்.
நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக கடந்த 08.12.2020 அன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதன்கிழமை (16.12.2020) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டார்.
இதன் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உரையாற்றுகையில்,
நிந்தவூர் பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்வதென்ற தீர்மானத்திற்கு அமைவாக தற்போது புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பிரதேச சபையின் உறுப்பினராக நியமனம் செய்வதற்கு கட்சியும், நிந்தவூர் மத்திய குழுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்தின் மூலமாக நாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த கந்தசாமிப்பிள்ளை சுதாமதி அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேசம் முஸ்லிம், தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. நீண்ட காலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இங்குள்ள தமிழர்களை கௌரவிக்கும் வகையில் பட்டியல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த கந்தசாமிப்பிள்ளை சுதாமதியை பிரதேச சபையின் உறுப்பினராக நியமித்துள்ளமை மூலமாக தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, தமிழ் மக்களும் இந்த நியமனத்தை தங்களுக்குரிய கௌரவமாக கருதி இன உறவினை மேலும் பலப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.
இன்றைய இந்நிகழ்வு வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும், புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமிப்பிள்ளை சுதாமதி கட்சி விசுவாசத்துடன் செயற்படுவதோடு, ஊரின் இன ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
புதிய உறுப்பினராக சத்தியப்; பிரமாணம் செய்ததன் பின்னர் கந்தசாமிப்பிள்ளை சுதாமதி உரையாற்றுகையில்,
இத்தகையதொரு தருணம் என் வாழ்வில் எற்படுமென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. என்னுடைய பெயரை பட்டியல் வேட்பாளராக இணைத்துக் கொண்ட போதிலும், இவ்வாறு ஒரு கௌரவத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தவிசாளரும், மத்திய குழுவும் வழங்கியமைக்கு நான் என்றும் நன்றியுடையவளாகச் செயற்படுவேன் என்று உறுதி கூறுகின்றேன். நிந்தவூர் அட்டப்பள்ளம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எமக்கு வழங்கியுள்ள இந்த கௌரவத்தினை நாம் ஒரு போதும் மறந்து செயற்படமாட்டோம் என்று தெரிவித்தார்.
இதே வேளை, பிரதேச சபையின் உறுப்பினராக நியமனம் பெறுவதென்பது அரியதொரு சந்தப்பமாகும். அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு ஏற்ப தாங்கள் செயற்பட வேண்டுமென்று நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களும், முன்னாள் உறுப்பினர்களும் புதிய உறுப்பினரைக் கேட்டுக் கொண்டார்கள்.
(பாறுக் ஷிஹான்)
கருத்துக்களேதுமில்லை