முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்-திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களினால் பல்வேறு காரணங்களை முன் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் அடிப்படை குர்ஆன், ஹதீஸ் என்று கூறப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இக்கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டது.
அதிகாரத்தைப் பெற்ற தலைவர் அஷ;ரப் அவர்களும் தன்னால் முடியுமான பல பணிகளை சமுகத்துக்காகவும், இந்நாட்டுக்காவும் செய்தார். இவை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
அவரது மரணத்தைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை என்று கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டல்கள் ஓரங்கட்டப்பட்டன. இதுவே சமுகத்தற்கு கிடைத்த முதலாவது சாபமாகும். முதன் முதலாக கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டது. தீர்வாக பேரியல் அஷ;ரபும், ரவூப் ஹக்கீமும் இணைத் தலைவர்களானார்கள்.
இருப்பினும் தலைமைத்துவ ஆசை இன்னும் சிலரையும் தொற்றியது. அவர்கள் முஸ்லிம் காங்கிரசை குறைகண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவராக விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார்கள். தலைவரின் மனைவி பேரியல் அஷ;ரப் நுஆ என்ற கட்சியுடன் தனியே விலகிப் போனார். அதாவுல்லாஹ் தேசியக் காங்கிரஸ் கட்சியோடு சென்றார். ரிசாத் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு சென்றார்.
புதிய கட்சி ஆரம்பித்தமைக்கு இவர்கள் அனைவரும் கூறிய காரணம் முஸ்லிம்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்பது தான். முஸ்லிம் மக்களும் நம்பி வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். கிடைத்த சில ஆசனங்களை வைத்துக் கொண்டு எந்தக் கட்சி ஆட்சி ஆட்சிக்கு வருகின்றோ அந்தக் கட்சியோடு சேர்ந்து அமைச்சு, இராஜாங்க அமைச்சு, பிரதி அமைச்சு, இணைத்தலைமை என பல வரப்பிரசாதங்களைப் பெற்று அனுபவித்து வந்தனர்.
முழுநாட்டுக்குரிய அமைச்சுப் பதவியைப் பெற்றாலும் தங்களுக்குரிய பிரதேசத்துக்கான அமைச்சுப் பதவியாக அதனைக் கருதி தத்தமது பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்யத் தொடங்கினார்கள். இதனால் சிங்கள, தமிழ் சமுகங்களிலே முஸ்லிம் சமூகம் பற்றிய தப்பெண்ணம் தோன்றத் தொடங்கியது.
பெரிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டதனால் சிங்கள, தமிழ் மக்களும் அக்கட்சிக்கு வாக்களித்தனர். இந்த வாக்குகளையும் பெற்று எம்.பி யானாலும் பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், ஏனைய ஒதுக்கீடுகளில் சிங்கள தமிழ், பகுதிகளுக்குச் ஒரு சதமேனும் ஒதுக்கப்பட வில்லை. இது நமது சமுகத்தைப் பற்றிய தப்பெண்ணத்தை சகோதர இன மக்களிடையே இன்னும் அதிகரித்தது.
இவர்கள் அமைச்சர்களாக இருந்த போது திறப்பு விழாக்கள் என்று வந்து விட்டால் அவர்களது கட்சி நிதியால் செய்யப்பட்ட அபிவிருத்திகளைப் போல கட்சி சார்ந்தோர் மட்டும் இந்த விழாக்களுக்கு அழைக்கப்பட்டார்கள். வேறு மக்கள் பிரதிநிதிகள் அப்பகுதியில் இருந்தாலும் அக்கட்சிக்குரியவர்களின் பெயர்கள் மாத்திரம் பெயர்க்கற்களில் பொறிக்கப்பட்டன.
இவற்றை தொடர்ந்து அவதானித்து வந்த பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தப்பெண்ணம் வலுப்பெற்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர் தப்பெண்ணத்தை மேலும் வலுப்படுத்தினர். இதனால் இலகுவாக அது வளர்ந்து வந்தது. அதன் பிரதிபலிப்புக்களில் ஒன்று தான் இன்று நமது மையித்துக்கள் பலாத்காரமாக சாம்பலாக்கப்பட்டு வருகின்றமையாகும்.
இப்போது கூட சுயநலத்தை மையமாக வைத்து ஆளுங்கட்சியோடு இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளால் நமது மையித்துக்களைக் காப்பாற்ற முடியவில்லை. அது தொடர்பாக தமது எதிர்ப்பைக் கூட வெளிக்காட்ட முடியவில்லை. காரணம் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் கொடுக்கப்பட்டாயிற்று. இதனால் உரிமைகள் பற்றி வாய் திறக்க முடியாது.
மையித்துக்கள் சாம்பலாவதைக் காப்பாற்ற முடியாத, அதற்கு எதிர்ப்புக் கூட வெளியிட முடியாத இக்கட்சிகளால் இனியும் முஸ்லிம் சமுகத்துக்கு ஏதும் நன்மைகள் கிட்டும் சாத்தியம் உள்ளதா? இதனை விட இந்தக் கட்சிகளால் ஏதாது உரிமைகளை சமுகத்துக்கு பெற்றுத் தரமுடியுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
பெரும்பான்மை சமுகத்தின் மத்தியில் நம்மைக் காட்டிக் கொடுத்து நாம் சந்தோசமாக வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள இந்தக் கட்சிகள் இனியும் தேவையா என்பது குறித்து சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளது.
எனவே, இது பற்றி நாம் சிந்திப்போம். நமது பாமர மக்களுக்கும் இந்த நிலையை எத்திவைப்போம். அடுத்து வரும் தேர்தல்களில் இக்கட்சிகளுக்கு வாக்களித்து இன்னும் நமது சமுகத்தின் நிலையை மோசமாக்கமால் இருக்க முயற்சிப்போம்
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை