கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை,இதுவரை1,647 ஆக அதிகரிப்பு-மாகாண பணிப்பாளர் அழகையா லதாகரன்
(பதுர்தீன் சியானா)
கிழக்கு மாகாணத்தில் 60 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,கூடு தலாக கல்முனை தெற்கில் 15 பேரும் காரைதீவில் 13 பேரும் கிண்ணியாவில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை, இன்று (11)வரை 1,647 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 552 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று திங்கட்கிழமை (11) வரை 2,869 பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும். 15 பேர் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பேலியகொட கொத்தணி மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 382 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 966 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 210 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 66 பேருமாக 1,624 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்த, மினுவாங்கொட, கந்தக்காடு கொத்தணி, வெலிசற கடற்படை முகாம் போன்றவை மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
கல்முனைப் பிராந்தியத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் ஒருவருமாக 10 மரணங்களும் சம்பவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை