இறந்தும் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்து வாழ வைத்த ஆசிரியை!
துபாய் நாட்டில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (வயது 41) இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் சொந்த ஊரான டெல்லியில் படித்து வருகின்றனர். அமீரகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால விடுமுறைக்காக டெல்லி சென்றார். அங்கு சேர்ந்த உடனே அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதே பகுதியில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வரும் தனது மைத்துனரான டாக்டர் அன்வர் ஆலம் என்பவரிடம் சென்று உடல்நிலையை பரிசோதித்தார்.
அப்போது அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் அனெரிசம் எனப்படும் மூளையில் உள்ள ரத்தநாளம் வீங்கி வெடிக்கும் நிலையில் உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை மோசமானது. வென்டிலேட்டரில் அவருக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது.
கோமா நிலைக்கு சென்ற அவரை கடந்த டிசம்பர் 24-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். பிறகு அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் அவரது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. 2 கண்நோயாளிகள் உள்ளிட்ட 6 பேர் அவரது உறுப்புகளால் மறுவாழ்வு அடைந்துள்ளனர். இறந்தும் 6 பேரை வாழ வைத்ததாக அமீரக சமூக ஊடகங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் எந்த எந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றினார்? போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கருத்துக்களேதுமில்லை