இந்தோனேசியாவில் 6.5 ரிச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பம்: 35 பேர் பலி: பலருக்கும் காயம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று இடம்பெற்ற 6.5 ரிச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்காணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதன் சக்திவாய்ந்த பின் அதிர்வுகள் சுனாமி அலையைத் தூண்டக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

மஜேனே நகரின் வடகிழக்காக 6 கிலோ மீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது. அதிகாலை 1.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த அதிர்வால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு உயர்ந்த இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இந்த பூகம்பம் மற்றும் அதற்கு பின்னர் ஏற்பட்ட அதிர்வுகளால் மூன்று நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு பகராசார் நகர் போன்ற பிராந்தியத்தின் பிரதான நகரங்களுக்கான பாலங்களும்; சேதமடைந்துள்ளன.

இதனால் 60க்கும் அதிகமான வீடுகள், இரண்டு ஹோட்டல்கள் மற்றும் மாகாண அலுகவலகம் சேதமடைந்துள்ளன. குறைந்தது இருவர் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளனர்.

“தற்போது நிலைமை சரியாகி இருப்பதற்கு இறைவனுக்கு புகழ் சேரட்டும். ஆனால் மற்றொரு பின்னதிர்வை நாம் உணர்ந்தோம்” என்று 26 வயதான குடியிருப்பாளரான சுக்ரி எபன்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மஜேனே மற்றும் அண்டைய மாவட்டமான மமுஜுவில் 35 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மேற்கு சுலவேசி அனர்த்த முகாமைத்துவ தலைவர் டார்னோ மஜீத் தெரிவத்துள்ளார். மீட்புப் பணிகளை ஒட்டி உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்த அனர்த்தத்தினால் 637 பேர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மமுஜு நகரத்தில் மித்ர் மனகர்ரா மருத்துவமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர, இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாதபோதும் சக்திவாய்ந்த பின் அதிர்வுகள் சுனாமி அலையைத் தூண்ட வாய்ப்பு இருப்பதாக இந்தோனேசிய காலநிலை மற்றும் புவிப்பௌதீகவில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூகம்பத்தைத் தொடர்ந்து நேற்று பின்னேரம் வரை 26 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

தொலைத்தொடர்புகளை சரிசெய்வது, சேதமடைந்திருக்கும் பாலங்களை சீர்செய்வது மற்றும் கூடாரங்கள், உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக மேற்கு சுலவேசி மாகாண ஆளுநரின் பேச்சாளர் சப்ருத்தீன் தெரிவித்துள்ளார்.

மோசமான, நாசகர பூகம்பங்களும் சுனாமியும் பல முறை தாக்கிய நாடாக இந்தோனேசியா உள்ளது. 2018ஆம் ஆண்டு சுலவேசி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.