தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா!
அது 2008ஆம் ஆண்டு. எட்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ஒடிஷாவில் ஒரு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் ஒரு முட்டை வடிவ பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அவர் அது டைனோசர் முட்டைபோல உள்ளது என நினைத்தார். முதன் முதலில் ரக்பி போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமிதான் சுமித்ரா நாயக். தற்போதைய இந்தியாவின் பெண்கள் ரக்பி அணியின் முக்கிய வீராங்கனை. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மைதானத்தில் தன் சிறு வயதில் இந்த விளையாட்டை தொடங்கிய சுமித்ராவின் இளமைக் காலம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.
ஆரம்ப கால போராட்டம்
ஒடிஷாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள டுபுரி கிராமத்தில் 2000ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பிறந்தார் சுமித்ரா நாயக். தமது கணவரின் (சுமித்ராவின் தந்தை) துன்புறுத்தல் காரணமாக இவரது தாய் மூன்று குழந்தைகளுடன் கிராமத்தைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. சுமித்ராவின் தந்தை தனது குடும்பத்தையே ஒரு முறை கொளுத்த முற்பட்டார் ஆனால் அவர்கள் எப்படியோ தப்பித்தனர். அந்த சூழ்நிலையில் இருந்து தனது குழந்தைகள் விலகி வளர வேண்டும் என அந்த தாய் விரும்பினார். எனவே சுமித்ரா நாயக், கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்ஸில் நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அங்கு பழங்குடி மக்களுக்கு கல்வியும், விளையாட்டு பயிற்சியும் இலவசமாக வழங்கப்பட்டது. அழகு நிலையம் நடத்தும் சுமித்ராவின் தாய்க்கு ரக்பி விளையாட்டு குறித்து ஏதும் தெரியவில்லை. வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விளையாடுவதை கண்டு அவர் முதலில் அச்சமடைந்தார்.
ஆனால் உறுதியாக இருந்த சுமித்ரா தனது தாய்க்கு விளையாட்டை விளக்கினார். தங்களை காத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது என சுமித்ரா தெரிவித்தார். தனது விளையாட்டை தொடர்ந்து விளையாட முடிந்ததற்கு காரணம் தனது தாய் தனக்குள் விதைக்க தைரியமே காரணம் என்கிறார் சுமித்ரா.
முயற்சியால் கிடைத்த வெற்றி
ரக்பி விளையாட்டில் மாநில அளவில் சிறந்து விளங்கிய சுமித்ரா நாயக் பல பதக்கங்களை வாங்கிக் குவித்தார். இந்த கட்டம்தான் ஒவ்வொரு புதிய போட்டியும் ஒரு பாடமாக இருந்து திறனை வளர்த்துக் கொள்ள உதவியது. 2016ஆம் ஆண்டு துபாய் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்திய தேசிய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு வெண்கல பதக்கம் வென்றார் இவர். வெளிநாட்டில் விளையாடுவதை தான் விரும்புவதாக தெரிவிக்கிறார் சுமித்ரா. ஏனென்றால் அங்கு நிறைய வீரர்களை சந்திக்கவும் கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பெண்கள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி சுமித்ராவுக்கு ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது. அது இந்திய அணிக்கும் சிறப்பான போட்டியாகதான் இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு அணியிலும் 7 பேருக்கு பதிலாக 15 பேர் கலந்து கொள்ளலாம். இந்த சவால் இந்திய அணியால் சிறப்பாக எதிர்கொள்ளப்பட்டது. அதில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
எதிர்கால கனவு
ஆசிய அளவில் இந்தியா தற்போது 9/10 ஆவது இடத்தில் உள்ளது. இந்த இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி ஒலிம்பிக் போட்டிக்குள் அணி நுழைய வேண்டும் என்று விரும்புகிறார் சுமித்ரா. இளம் வீராங்கனைகள் தங்களது முடிவுகளை தாங்களே எடுக்கும் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்புகிறார் சுமித்ரா. இன்றளவும் பெற்றோரால்தான் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்கிறார் அவர். பெண்கள் ஆண்களுக்கு கீழே என்றே எண்ணத்தை முதலில் பெற்றோர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்தச் சமூகத்தில் அந்த எண்ணம் மாறும் என்கிறார் அவர். கல்வியும், பயிற்சியும் சுமித்ராவுக்கு ஒரு பிரச்னையாக இல்லாதபோதும், ரக்பியை தொடர்ந்து விளையாடுவதில் சிரமம் உள்ளது. ஏனென்றால் இதனால் வேலை வாய்ப்பு கிடைக்காது. பெரும் பரிசுத் தொகையும் கிடைக்காது. மேலும் இந்த விளையாட்டு இந்திய அரசின் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்கிறார் சுமித்ரா.
கருத்துக்களேதுமில்லை