ரசம் சாப்பிட்டால் கொரோனா போய்டும்! தமிழக அமைச்சரின் புது விளக்கம்..
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவில் ரசத்தை சேர்த்து கொடுத்ததினால் இந்தியர் ஒருவர் பெரிதும் பாராட்டப் பெற்றார். காரணம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற குறைபாடுகளுக்கு ரசம் அருமருந்தாக இருக்கிறது. அந்த வகையில் சளி, இருமல் இருந்தால் பயப்பட வேண்டாம் மருத்துவமனை அருகிலேயே இருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களிடம் நம்பிக்கை அளித்து இருக்கிறார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் புதிய அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டில்லிக்கு இணையான வகையில் இங்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது அரை கிளாஸ் ரசத்தை குடித்தால் கொரோனா வைரஸ் போய்விடும் என்றார். அதோடு மிளகு ரசம், வெள்ளை பூண்டு ரசம், சுக்கு ரசம் குடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் “சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை” என்ற வாசகத்தை அவர் மக்கள் மத்தியில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர் சளி, இருமல் இருந்தால் பயப்பட வேண்டாம். மருத்துவமனை அருகிலேயே இருக்கின்றது என்றும் நடந்தே மருத்துவமனைக்கு வந்துவிடலாம் என்றும் கூறினார். இதனால் கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் அச்சமின்றி வந்துவிடலாம் அதுவும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதுபோல் மருத்துவமனைக்கு மக்கள் பயமில்லாமல் நேரில் வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரசம் சாப்பிட்டால் கோரோனா போய்விடும் எனக் கூறிய தகவல் தற்போது ஊடகங்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.
கருத்துக்களேதுமில்லை