யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான்- சென்னையில் ஈழத் தமிழர்கள் பற்றி மோடி உரை!!
தமிழகத்தின் சென்னை மாநகருக்கு இன்று விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பற்றி உரையாற்றியுள்ளார்.
இதன்போது, இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசாங்கம் செய்த பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியதுடன் பல்வேறு உதவித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அவர் உரையாற்றுகையில், “இலங்கை தமிழர்களின் யாழ்ப்பாணம் சென்றுவந்த ஒரே இந்தியப் பிரதமர் நான் தான். கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 50ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது. மலையக மக்களுக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன், சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது
மேலும், யாழ்ப்பாணத்தில் இந்தியாவினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் விரைவில் திறக்கப்படும். அதேபோல், யாழ்ப்பாணம் – மன்னார் இடையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, இலங்கை தமிழர் உரிமைக்காக, இலங்கை மத்திய அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஈழத் தமிழர்கள் சமத்துவம், சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்வோம்.
இதனிடையே, இலங்கை அரசாங்கத்தினால் கைதுசெய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதுடன் இலங்கையில் உள்ள மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை வசமிருந்த சுமார் 300 படகுகளை இதுவரை திரும்பப் பெற்றுள்ளோம்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை