ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக…
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆயரின் பூதவுடல் இன்று (04) மாலை ஊர்வலமாக செபஸ்தியார் போராலயத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
இதன்படி, ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலைச் சந்தியூடாக மன்னார் பொது விளையாட்டு மைதானச் சந்தியை குறித்த ஊர்வலம் சென்றடைந்தது.
அங்கிருந்து பெரிய கடை வழியாக மன்னார் நகரப்பகுதிக்கு வந்தடைந்ததுடன் அங்கிருந்து, மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாகச் சென்று மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வீதியூடாக டெலிகொம் சந்தியைச் சென்றடைந்தது. அங்கிருந்து ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினைச் சென்றடைந்தது.
குறித்த ஊர்வலத்தில் அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள், மக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை மதியம் இரண்டு மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலை மூன்று மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கருப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை