தளபதி மு.க.ஸ்டாலின் வெற்றி அளப்பரிய மகிழ்ச்சியையளிப்பதாக உள்ளது – றவூப் ஹக்கீம்

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.கூட்டணி தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிருப்பது அளப்பரிய மகிழ்ச்சியையளிப்பதாகவும், இந்த மகோன்னத வெற்றியின் ஊடாக இந்திய – இலங்கை தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்று பளிச்சிடுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டு கால இடை வெளியின் பின்னர் ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டுக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு ஏற்கவிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
பிரத்தியேகமாக தளபதி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடடிதமொன்றை எழுதும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அதற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ள அறிக்கையில் சில விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.அவையாவன:
மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி உட்பட திமுக வினரும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலான அதன் ஏனைய கூட்டுக் கட்சியினரும் எங்களுடன் சிறந்த நட்புறவைப் பேணிவருகின்றனர்.
234 ஆசனங்களைக் கொண்ட தமிழக சட்ட சபையில், அவற்றில் ஆகக் கூடுதலானவற்றை கைப்பற்றும் திறன் திமுக கூட்டணிக்கு வாய்த்திருக்கின்றது. தந்தையைப் போலவே புதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் தொகுதியில் மிக அதிகப் படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியிருப்பதுவும் மகிழ்ச்சிக்குரியது.
தி.மு.க.வின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான மனித நேய மக்கள் கட்சியில் இனிய நண்பர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியிலும், அதே கட்சியில் பா.அப்துல் சமது திருச்சி மாவட்டம் மணற்பாறைத் தொகுதியிலும் ,தி.மு.க.கூட்டணியில்இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நாகப்பட்டிணத்தில் இளம் அன்புத் தோழர் ஆளுர் ஷா நவாஸ் ஆகியோரும் வெற்றிவாகை சூடியிருப்பதும் எங்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.
தளபதி ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துடனும் எமது தாய்த் திருநாடான இலங்கை முதலான அயல் நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி பரவலாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த இறைவன் அருள் புரிய வேண்டுமென இறைஞ்சுகின்றோம்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.