கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்விற்கு கொண்டு வர ஈகை பெருநாளில் உறுதி ஏற்போம். பாப்புலர் ஃப்ரண்ட்…
சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி தமிழக மக்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
ஈகை பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நெஞ்சார்ந்த ஈகை பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வானம், பூமி மற்றும் அதற்கு இடையிலான படைப்புகளின் நோக்கம் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்து கூறுகின்ற இறை வேதமான ‘அல்குர்ஆன்’ அருளப்பட்ட மாதமே புனித ரமலான் மாதம். அத்தகைய புனிதமிகு ரமலான் மாதம் பல்வேறு நற்குணங்களையும், தூய சிந்தனைகளையும், நல்லறங்களையும் கற்றுத் தந்துவிட்டு மீண்டுமொரு முறை நம்மிடமிருந்து பிரியா விடை பெற்று சென்றிருக்கின்றது. ரமலான் நமக்கு கற்றுக் கொடுத்ததை நமது வாழ்வின் அனைத்து தருணங்களிலும் கடைபிடிப்பது மட்டுமே ரமலானை கண்ணியப்படுத்தியதாக அமையும்.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றாலும், அச்சத்தாலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களின் சொந்தங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக மக்கள் நலனில் அக்கரையற்ற அரசாக செயல்படுவதை குறித்து உலக நாடுகள் இன்று வெளிப்படையாக விமர்சனங்களை மேற்கொண்டுவருகின்றன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறியது மட்டுமல்லாமல் அது பல மடங்கு பல்கி பெருகுவதற்கும் காரணமாக மத்திய அரசின் அலட்சியம் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மக்கள் ஆக்ஸிஜன், மருந்து, மருத்துவமனை படுக்கை என எதுவும் கிடைக்காமல் துயரத்துடன் வீதிகளில் உறவுகளை வைத்துக் கொண்டு காத்துக் கிடந்த போது, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் உற்சாகமாக பங்கெடுத்திருந்தார். இப்படி மத்திய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட விளைவை இந்தியா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே சொந்தங்களை இழந்தவர்களுக்கு நாம் ஆதரவாகவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவிடும் கரமாகவும் இத்தருணத்தில் செயல்படுவது தான் உண்மையான பெருநாள் கொண்டாட்டம். எனவே நாமனைவரும் இணைந்து மக்களை இயல்பு வாழ்விற்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.
என தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை