முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!
கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதித்த கர்ப்பிணிகள் பிரசவிக்கும் குழந்தைகளின் தலை இயல்பான குழந்தையின் தலை அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணியான அவர் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக கடந்த ஒருவாரத்திற்கு முன் அவரது தாயாரும் இதே அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 13 பேரின் பரிசோதனை மாதிரிகளை புணேவில் உள்ள தேசிய நுண்ணுயிரிகள் ஆய்வு நிலையத்திற்கு மாநில சுகாதாரத்துறை அனுப்பிவைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை