பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் – டக்ளஸ்
பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை இன்று(புதன்கிழமை) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையிலேயே, 2016, 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக் கூட்டு நிறுவனம், கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.
கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.
எனவே, நாரா – நக்டா – கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.
அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன். அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன்
இவ்வாறான நிலையில்தான், கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.
இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் தன்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவாடல்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.“ எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை