புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் வீடியோ வைரல் ஆனதால் இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது.

நாவாந்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் புறா வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் . அதில் ஒருவரின் புறாவை இன்னுமோர் இளைஞன் தனது புறாக்களை கொண்டு இறக்கி உள்ளார்.

புறாவுக்கு சொந்தக்காரரான இளைஞன் புறாவினை திருப்பி கேட்டபோது, ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது. அதில் புறாவுக்கு சொந்தக்காரரான இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, ஊர் மக்களின் கோரிக்கைக்கு இணங்க குறித்த இளைஞர் குழு தாம் தாக்கிய இளைஞனிடம் மன்னிப்பு கோர அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அந்த இளைஞனின் உறவினர்கள் உள்ளிட்ட பெண்கள் குழுவொன்று நான்கு இளைஞர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி,  மிளகாய் தூளை முகத்திற்கு பூசி,  சித்திரவதைகள் புரிந்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த வீடிவோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.

இச்சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு கிழமைகளின் பின்னர் பெண்கள் குழுவின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞன் ஒருவரின் பிறந்த நாளான கடந்த 26ஆம் திகதி தனது நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் சித்திரவதை புரிந்த பெண்கள் சிலர் ‘எங்களிடம் அடி வாங்கிட்டு, பிறந்தநாள் கொண்டாட வெட்கம் இல்லையா ?’ என கேட்டுள்ளனர்.

பெண்களிடம் அடிவாங்கி சித்திரவதைக்கு உள்ளான வீடியோ வைரல் ஆனதால், நண்பர்கள், உறவினர்களின் கிண்டல், கேலிக்குகளுக்கு உள்ளாகி மனமுடைந்திருந்த இளைஞன், குறித்த பெண்களும் தன்னை கேலி செய்தமையை தாங்காது அன்றைய தினம் இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனை அறிக்கை நேற்றைய தினம்  கிடைக்கப்பெற்றது.

அதில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமையை அடுத்து, இளைஞனின் சடலம் சுகாதார பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டு, கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.