தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பினை வரவேற்கின்றோம் ! பொதுவாக்கெடுப்புக்கு வலுச்சேர்க்க வேண்டுகிறோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
தமிழ்நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து நீண்டகாலமாக கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ் அகதிகளின் நலனுக்காக, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் சட்டப்பேரைவயில் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகளை வரவேற்ப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு வலுச்சேர்க்குமாறு கோரியுள்ளது.
இலங்கைத் தமிழர் அகதிமுகாம் என்பதற்கு பதிலாக இனி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கீழ் வரும் சிறப்பு அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார்.
ஈழத்தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதியவீடுகள். சாலைகள், குடிநீர் வசதி சீரமைப்பு. விலையில்லா எரிவாயு அடுப்பு இணைப்பு.
குழந்தைகள் கல்விக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பொறியியல் படிக்க தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும். முதுநிலை படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தொழிற்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு. பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ2,500லிருந்து ரூ10,000 ஆகவும், கலை ரூ அறிவியல் மாணவர்களுக்கு ரூ3000ல் இருந்து ரூ12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ5000ல் இருந்து ரூ20,000 ஆக உதவித்தொகை உயர்வு.
இலங்கை அகதிகள் முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கீடு.
ஈழத்அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என்ற சிறப்பு அறிவிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
நீண்டகாலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் அகதிகளின் நலன்களுக்காக தமிழ்நாட்டு அரசின் இந்த அறிவிப்புக்களை வரவேற்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, இச்சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் அகதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களை விடுவிக்க தமிழ்நாட்டு அரசு ஆவண செய்ய வேண்டுவதாகவும் கோரியுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரைவயில் முன்னராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அடியொற்றி, பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்துக்கு தமிழ்நாட்டு அரசின் உறுதுணையினை வேண்டுவதாக தெரிவித்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, இலங்கைதீவில் ஈழத்தமிழ் மக்கள் சுதந்திரமும் அரசியல் இறைமையும் கொண்டு வாழ்வதற்கான அரசியல் தீர்வுக்கு அம்மக்களே தாங்கள் தீர்மானிக்கின்ற வகையில் பொதுவாக்கெடுப்பு பொறிமுறையாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை