பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!
இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது.
குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த கைதிகள், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எத்தி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் இவ்விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது, இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு மீனவர்களும் ஒரு குடிமகனும் அடங்குவர் என்று பைசல் எத்தி கூறியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பைசல் எத்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, விடுதலை செய்யப்பட்ட அல்லாபக்ஷ், முபாரக் மற்றும் யூனுஸ் ஆகியோர் வாகா எல்லை வழியாக லாகூரை அடைந்தனர். ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதில் இரண்டு மீனவர்களும் கராச்சியைச் சேர்ந்தவர்கள், குடிமகன் தட்டாவைச் சேர்ந்தவர். இவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அனுமதி முடிந்ததும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம்.
அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி, மாலை 5 மணிக்கு கராச்சி எக்ஸ்பிரஸ் வழியாக, குறித்த மூவரும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
எத்தி அறக்கட்டளை அடிக்கடி பாகிஸ்தான் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களுக்கு உதவி செய்து, அவர்களை திருப்பி அனுப்ப உதவியது.
நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை மீண்டும் அவர்களது இடத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அமைதியை ஊக்குவிக்கும் ஒரு என்.ஜி.ஓ ஆன அகாஸ்-இ-தோஸ்தி வெளியிட்ட ஒரு பட்டியலின் படி, இந்திய சிறைச்சாலைகளில் 67 பாகிஸ்தானியர்கள் தங்களது தண்டனையை காலத்தை நிறைவு செய்து, சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கு காத்திருக்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இரு அரசாங்கங்களுக்கிடையிலான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், ஜனவரி 1, 2021 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பரிமாற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை