வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு நடுவில் – ஐ.நா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நம்பிக்கை மற்றும் விரக்தி என்பவற்றுக்கு இடையில் மாறி மாறி ஊசலாடும் நிலையில் கடுந்துயரை அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை வருமாறு,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஆகிய தரப்புக்களுடன் இங்கு இலங்கையிலும், உலகம் நெடுகிலும்
உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு தோழமையுடன் இணைந்து கொள்கிறது.
ஆளொருவர் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவம் குடும்பங்களினதும், சமூகங்களினதும் தமது அன்புக்குரியவர்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமையையும், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றுக்கான உரிமையையும் இல்லாமல் செய்கின்றது.
அவர்கள் நம்பிக்கை மற்றும் விரக்தி என்பவற்றுக்கு இடையில் மாறி மாறி ஊசலாடும் நிலையில் கடுந்துயரை அனுபவிப்பதுடன், தமது அன்புக்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக சில சந்தர்ப்பங்களில் பல வருடங்கள் கவலையுடன் காத்திருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர்
உண்மைக்கான தேடல் தம்மை ஆபத்தில் தள்ளிவிட முடியும் என்ற அச்சத்தில் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
காணாமற் போன குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான போராட்டத்தின் முன்னணியில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களே இருந்து வருகின்றார்கள். இந்தப்
பாத்திரத்தை வகித்து வரும் பொழுது அவர்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்குதல்கள் என்பவற்றை எதிர்கொள்ள முடியும்.
தீர்த்து வைக்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் உருவாக்கப்படும் பாதுகாப்பற்ற உணர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும்
வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய சமூகங்களும், ஒட்டுமொத்த சமுதாயமும் அந்த உணர்வை அனுபவிக்கின்றன.
2016 ஆம் ஆண்டில் காணாமற் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் (ழுஆP) ஸ்தாபிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு வழிமுறையாகும். காணாமற்
போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தின் வெற்றிக்குப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, தக்கவைத்துக்
கொள்வது அத்தியாவசியமானதாகும். அதன் நிர்ணயகரமான பணிகளுக்கென வளங்கள், திறன்கள், அரசியல் ஆதரவு என்பவற்றுடன் கூடிய முழுமையான சுயாதீனமான மற்றும் வினைத்திறன் மிக்க
ஒரு நிறுவனம் அத்தியாவசியமாகும்.
அத்தகைய ஒரு நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஒரு சில பதில்களை வழங்குவதில் உதவ முடியும். அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் துணிவு, அர்ப்பணிப்புணர்வு மற்றும் திடசங்கற்பம் என்பவற்றை இன்றைய தினத்தில் நாங்கள்
அங்கீகரிக்கின்றோம். எத்தனையோ சவால்களை எதிர்கொண்ட போதிலும், காணாமற் போயிருக்கும் தமது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதி குறித்து நீதியைக் கோரி, பதில்களை எதிர்பார்த்துத்
தொடர்ந்தும் அவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள், நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.
கருத்துக்களேதுமில்லை