தந்தை பெரியார் பிறந்த நாள், இனி சமூக நீதி நாள் முதல்வர் அறிவிப்பு; வைகோ பாராட்டு.
முதல்வர் அறிவிப்பு; வைகோ பாராட்டு
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17, ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கேரளாவின் வைக்கம் நகரில் ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, தன் மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர்களுடன் சிறை சென்று சமூகநீதி காத்த போராளித் தலைவர் தந்தை பெரியார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு. கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கும் சமூகநீதிக் கொள்கை உயர்நீதி மன்றத்தாலும், உச்ச நீதி மன்றத்தாலும் முடக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து மக்களை அணி திரட்டிப் போராடி, முதன் முதலாக இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்து, சமூக நீதி காத்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார்.
பெண் அடிமை ஒழிப்பு, தொழிலாளர் மேம்பாடு, சாதி ஒழிந்த சமத்துவ நிலை, சுயமரியாதை ஆகிய சமூகநீதிக் கொள்கைகளுக்காக, விழி மூடுகின்ற வரையிலும், களத்தில் நின்று போராடிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார்.
அவரது தலை மாணாக்கரான பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு அரசையே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி மகிழ்ந்தார்.
27.06.1970 அன்று, ஐ.நா. நிறுவனத்தின் யுனெஸ்கோ அமைப்பு, “தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்றும்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்றும்; மூட நம்பிக்கை, பகுத்தறிவு அற்ற சடங்குகளுக்குக் கடும் எதிரி” என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்துப் பாராட்டியது.
அரசுப் பொறுப்பு எதுவும் வகிக்காத அவர் மறைந்தபோது, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய, முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்பாடு செய்து சிறப்பித்தார்கள்.
மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்திய அரசு, தந்தை பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.
சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள், மண்டல் குழு பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உரையாற்றும்போது, “சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையான பெரியார் அவர்களின் கனவுத் திட்டமான சமூகநீதிக் கொள்கையை, இந்த அரசு இப்பொழுது செயல்படுத்துகின்றது” என்று குறிப்பிட்டு, பெரியாருக்குப் புகழ் ஆரம் சூட்டினார்.
உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள், மண்டல் குழு அறிக்கை வழக்கு தொடர்பான தீர்ப்பில், “குற்றப் பரம்பரையில் பிறந்த என்னைப் போன்றவர்கள், நீதிபதியாக உயர்வதற்கு பெரியாரின் சமூகநீதிக் கொள்கையே காரணம்” என்று பாராட்டினார்.
இலக்கியத்தில் நோபல் பரிசுபெற்ற வி.எஸ்.நைபால் அவர்கள், பெரியார் திடலில் பெரியார் சிலையையும், பெரியார் நினைவகத்தையும், பெரியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டு, “சமூகநீதி காக்க இவரைப் போல் உழைத்தவர்கள் இந்தியாவில் எவருமே இல்லை” என்று மனம் திறந்து பாராட்டினார்.
அத்தகைய மாபெரும் சமூகநீதிப் போராளியான தந்தை பெரியாரின் பிறந்த நாளை, சமூகநீதி நாளாக அறிவித்து, தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி காக்கும் உறுதிமொழி எடுப்பதற்கு ஆவன செய்துள்ள, தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கருத்துக்களேதுமில்லை