குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் ! தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நன்றி!!
சென்னை : மதசார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை, ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தமிழக தலைவர் முகம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களை மதங்களின் அடிப்படையில் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று (08.09.2021) தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘சி ஏ ஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தும்’ தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். சிறுபான்மை சமூகத்தின் உணர்விற்கு மதிப்பளித்து தமிழக அரசு இயற்றியுள்ள இந்த தீர்மானத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான சி ஏ ஏ சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய தொடர்ச்சியான முன்னெடுப்புகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும், இந்த கருத்தில் ஒத்த நிலையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் திமுக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை