இலங்கையில் சீன தலையீடு குறித்து இந்தியாவில் ராதா எம்பி கருத்து.

இந்தியாவில் வாழும் இலங்கை மலையக தமிழர்கள் தாயகம் திரும்புவது வீணான செயல் என்று இலங்கை எம்.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி: இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் திருச்சி வந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீனை காஜா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. ரயில் பாதையும், பல்கலைக்கழகமும் அமைத்துக் கொடுத்துள்ளது. இலங்கையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி என்றாலும், முக்கிய பதவிகளில் ராணுவ அதிகாரிகளே இருக்கின்றனர். அதனால் கிட்டத்தட்ட ராணுவ ஆட்சியை போன்ற தோற்றம் நிலவுகிறது. இலங்கையில் 500 ஹெக்டேர் பரப்பளவில் சீனா துறைமுகம் அமைத்து வருகிறது. 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இலங்கையில் தொழில் நோக்கத்துடன் மட்டுமே சீனாவின் முதலீட்டுக்கு இலங்கை அரசு அனுமதித்து வருகிறது.

இந்தியாவுடன் இலங்கை நெருங்கி செயல்பட்டுவருகிறது. சீனாவின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு மிக நெருக்கமான நாடு இந்தியா தான். 28 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இலங்கையில் மூன்று தீவுகளை சீனா கையகப்படுத்தியுள்ளது. காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த மூன்று தீவுகளும் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகள் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்க கூடியவையாகும். அதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று இலங்கைவாழ் தமிழர்கள் அச்சமடைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தற்போது சீனா கடன் கொடுத்து பின்னர், இலங்கையால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை சீனா மேற்கொள்ள கூடிய அபாயம் உள்ளது. இலங்கை முக்கிய தொழிலான சுற்றுலா, டீ, ரப்பர் போன்றவை சரிவை சந்தித்துள்ளது. தொழிலாளர்கள் சம்பளம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஆயத்த ஆடை உள்ளிட்ட பல தொழில்கள் இந்தோனேசியா வசம் சென்று விட்டது. தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களை மறுவாழ்வு இல்லங்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மாற்றியமைத்தது பாராட்டுக்குரியது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இதில் இலங்கை தமிழர்கள் புரிந்து முடிவு எடுக்கவேண்டும். தற்போது வடகிழக்கு பகுதிகளிலிருந்து போர் காரணமாக வெளியேறியவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதை எவ்வித தயக்கமும் இல்லை. அவர்கள் தாராளமாக தாயகம் திரும்பி தங்களது வாழ்க்கையை தொடரலாம்.

ஆனால் மலையக தமிழ் மக்கள் விரும்பும் தாயகம் திரும்புவது வீணான செயலாகும். அவர்கள் மலையகத்திற்கு திரும்பி தோட்டத் தொழிலில் ஈடுபட கூடிய வாய்ப்பு அங்கு இல்லை. வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் அவர்கள் தாயகம் திரும்புவது தேவையற்றது. ஆகவே அவர்களுக்கு இந்தியாவிலேயே உதவிகளையும், அவர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கி வாழ்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தாலும் அவர்களது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. அவரது உரிமைகள் கிடைக்கவில்லை. சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. கரோனா காரணமாக இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு உணவுக்கு பஞ்சம் ஏற்படவில்லை. அடுத்த 6 மாத காலத்தில் நிலைமை சீராகும். பொதுவாக ஒரு ஆட்சி ஏற்பட்டு அமைக்கப்பட்டு 4வது ஆண்டில் விரக்தி ஏற்படும். ஆனால் இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் விரக்தி அடைந்துள்ளனர். சீனா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது கிடையாது. பொருளாதார ரீதியாக மட்டுமே அவர்கள் அங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாட்டின் சட்ட திட்டங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. அந்த வகையில் தமிழக முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு தலையிட முடியாது. கடந்த காங்கிரஸ் கட்சியோடு தற்போதைய பாஜக ஆட்சியில் இந்தியா இலங்கை நட்புறவு அதிக அளவில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக இருந்தாலும் சில பிரச்சினைகள் இருந்துள்ளது. குறிப்பாக போராளிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தனர். போராளிகளுக்கு எதிராக தான் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. போராளிகளை ஒடுக்குவதற்கு தான் காரணமாக இருந்தார்கள். இதற்கு ராஜீவ் காந்தி படுகொலையும் ஒரு காரணம். இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இல்லை. உலக அளவில் அங்கீகாரம் இருந்தால் தான் ஒரு இயக்கம் வளர முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பரிமாற்றம், நூலகங்களுக்கு ஒரு லட்சம் நூல்கள் வழங்குதல் போன்று பல்வேறு நிகழ்வுகளில் அப்போதைய கல்வி அமைச்சர் கலந்துகொண்டார். அதே சூழ்நிலை தற்போது மீண்டும் தொடர வேண்டும் அதை உணர்வு மற்றும் உணர்ச்சியுடன் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.