சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் நடத்திய இரத்ததான முகாம்.
சவுதி அரேபியாவில் செப்டம்பர் 23 ம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய தினம் கொண்டாடப்படும். ஓட்ட பந்தயம், வாண வேடிக்கை, விமான சாகசங்கள், கார் மற்றும் பைக் பந்தயங்கள், கால்பந்து போட்டி என வாரம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கடுகு முதல் விமானம் வரை விற்பனை செய்யும் சவுதி அரேபியாவிலுள்ள முன்னணி வணிக நிறுவனங்கள் அனைத்தும் அதிரடி தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம்.
சவுதியில் பணிபுரியும் இந்தியர்களும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் ஜித்தாவில் சவுதி தேசிய தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடும் விதமாக இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தனர்..
நேற்று (17-09-2021) வெள்ளிக்கிழமையன்று ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில் 45 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 37 பேரிமிருந்து இரத்தம் கொடையாக பெறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த இந்த முகாமில் பெண்களும் கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்வதற்காக பரிசோதனை செய்யும் போது ஹீமோகுளோபின் குறைவு காரணமாக பொதுவாகவே பெண்கள் இரத்த்தானம் செய்ய முடியாமல் திரும்பி செல்வது வழக்கம். இந்த முகாமில் பெண்களும் குருதிக் கொடையளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாம் பற்றி பேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப், இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம் போன்ற நாட்களில் வழக்கமாக இது போன்ற முகாம்களை நாங்கள் நடத்துவது வழக்கம். இந்த முறை சவுதி தேசிய தினத்தை பயனுள்ள முறையில் கொண்டாடும் விதமான இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தோம் என்றார்.
அவசர தேவைக்காக எல்லா நேரங்களிலும் நாங்கள் இரத்ததானம் செய்து வருகின்றோம். ஹஜ் செய்வதற்காக உலகின் பல பகுதியிலிருந்து வரும் ஹஜ் பயணிகளில் தேவையுடையோருக்காக பிரம்மாண்டமான முகாம்களை நடத்துவது வழக்கம் என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான பொறுப்பாளர் சலாஹூதீன் குறிப்பிட்டார்.
டாக்டர். அய்மன் அவர்களின் மேற்பார்வையில் கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி குழுவினர் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர்.
ஜித்தாவில் மட்டுமின்றி ரியாத் மற்றும் தம்மாம் மண்டலங்களிலும் சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததானம் நடைபெற்று வருகின்றது. இது ஜித்தா மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 23 வது முகாமாகும்.
கருத்துக்களேதுமில்லை