காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு பிச்சை போடுகிறதா காவிரிமேலாண்மை ஆணையம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எஸ்.கே. ஹல்தார் தலைமையில் 27.09.2021 அன்று டெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.

பதினான்காவது முறையாக நடந்த இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, 2021 ஜீன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 டி.எம்.சி பாக்கி உள்ளதாகவும், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை கூட்டம் முடிந்த அடுத்த நாள், சில ஊடகங்களில், தமிழ்நாட்டிற்கு 33.7 டி.எம்.சி நீரை திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவர் எஸ்.கே. ஹல்தார், தமிழ்நாட்டிற்கு 33.7 டி.எம்.சி நீரை திறந்து விடக்கோரி உத்தரவிடவில்லை என்ற செய்தி ஆங்கில இந்து நாளேட்டில் 28.09.2021 அன்று வெளியாகி உள்ளது.

மேலும், தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடு எனக்கூறாமல், கடந்த 30 ஆண்டு சராசரியை ஒப்பிட்டால் மேட்டூர் அணையில் நீர் பற்றாக்குறை இருக்கிறது. எனவே, அதையாவது கர்நாடகம் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக எஸ்.கே. ஹல்தார் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் திறக்க வேண்டும் எனக் குறிப்பிடாமல், குத்துமதிப்பாக நீர் திறக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் எஸ்.கே.ஹல்தார்.

அதாவது, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீர் உரிமையை மறுத்து, போனால் போகட்டும் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடுங்கள் என பிச்சையிடும் தோனியில் எஸ்.கே.ஹல்தார் பேசியுள்ளார்.

எஸ்.கே.ஹல்தார் அவர்களின் பேட்டியின் மூலமாக, காவிரி மேலாண்மை ஆணையமா, இல்லை கட்டப்பஞ்சாயத்து ஆணையமா என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழுகிறது.

தமிழ்நாட்டின் உரிமையை பெற்று தராத, பயனற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை நம்பி பயனில்லை. அதோடு, காவிரி மேலாண்மை ஆணையம் என்பது மோசடி ஆணையம் என்பது நமக்கு கடந்த கால அனுபவங்கள் பாடம் கற்பித்துள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு காவிரி நீர் உரிமையை பெற்றுத் தரும் என நாம் நினைத்தால், தமிழர்களைத் தவிர ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது. இதுவும் கடந்த கால கற்பிதங்கள் தான்.

எனவே,  2021 ஜீன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய 33.7 டி.எம்.சி நீரை பெறுவதற்கு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்து விட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும்இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்ததமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.