தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்தது. மேலும், 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.

இதன் தொடர்ச்சியாக,  வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகை கவிழ்த்து உள்ளது. இதில், 2 மீனவர்கள் உயிர் தப்பிய நிலையில், மீனவர் ராஜ்கிரன் என்பவர் நீரில் மூழ்கி மயமானார். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, மீனவர் ராஜ்கிரணை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்து, இந்தியாவில் இருக்கும் இலங்கை தூதரை கைது செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தமிழர்கள் மீதான  இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில், இருநாட்டு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.