100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்

100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த 2005 முதல், நூறு நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா காலத்தில், வேலைவாய்ப்புகள் இல்லாமல் முடங்கிய  ஏழை எளிய மக்களுக்கு வாழ்வு அளித்தது, இந்த 100 நாள் வேலைத்திட்டம் தான் என்பதை மறுக்க முடியாது.

இந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், நகரக்கழிவுகளால் மாசடைந்த ஜவ்வாது மலை நாக நிதி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கவுண்டன்ய மகாநதி, மத்தூர் ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும், ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவது, நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை அமைப்பது, மரக் கன்றுகள் நட்டு வன வளம் பெருக்குவது போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பல ஏரிகள், குளங்கள், நீர் வழித்தடங்களில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாய பணிக்கு ஆள் கிடைப்பதில்லை, மக்களை இது சோம்பேறியாக்குகிறது, அவர்கள் மரத்தடி நிழலில் வெட்டிக்கதை பேசி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இந்த வேலைத்திட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று சிலர் நிலவுடைமையாளர்களின் பக்கம் நின்று பேசி வருகின்றனர். இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது.

அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மைத் தொழிலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில், ஒருவர் ஓராண்டில், 100 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய முடியும். மற்ற நாட்களில், அந்த ஒருவர் விவசாயம் சார்ந்த பணிகளுக்கோ அல்லது வேறு பணிகளுக்கோ செல்வார்கள்.

100 நாள் வேலைத்திட்டம் என்பது மக்கள், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கொள்ளும் தற்காலிக ஏற்பாடு தான் என்ற புரிதல் இல்லாமல், அத்திட்டத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்பது ஏற்க முடியாதது.

வேண்டுமானால், விவசாய வேலைகளை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். இதன் வாயிலாக, அரசும், நிலவுடைமையாளர்களும் இணைந்து, மக்களுக்கு நலன் தரக்கூடிய சில ஒப்பந்தகளை விதித்து கொள்ளலாம்.

குறிப்பாக, நிலவுடைமையாளர்களின் நிலத்தில் வேலை செய்யும் மக்களுக்கு, நிலவுடைமையாளர்கள் தரப்பில் நியாயமான கூலியும், அரசு தரப்பில் போதுமான கூலியும் வழங்கலாம்.

இது ஒருபுறம் இருக்க, 100 நாள் வேலைத்திட்டங்களின் கீழ் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒன்றிய அரசு தரப்பின் வாயிலாக தெரியவந்துள்ளன. இந்தியா முழுவதும் சுமார் ரூ.935 கோடி அளவிற்கு இலஞ்சம், வேலை செய்யாத நபர்களின் பெயரில் பணம் ஏமாற்றுவது, அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்குவது என முறைகேடுகள் அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. அதோடு, 100 நாள் வேலை என்பதை குறைந்த பட்சம் 250 நாட்களாக உயர்த்தி, அத்தனை நாட்களும் வேலை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.