தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கைக்கு, ஒத்துழைப்பு நல்குவதாக கூறியுள்ள ஒன்றிய அரசு, அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுத்து வரவிருக்கும் நாட்களிலும் கனமழை இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த காலங்களை ஒப்பீடும் போது, சென்னையில் இந்தாண்டு 40 விழுக்காடு மழை அதிகம் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

மாநகரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடுக்கிவிட்டதோடு, நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்தி வருவது வரவேற்கதக்கது.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, நோய்த் தடுப்பு முகாம்களை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

இது ஒருபுறமிருக்க, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசு, தானே, நீலம், மடி புயல், நாடா, வர்தா, ஒகி, கஜா ஆகிய புயல்களை சந்தித்துள்ளது. இந்த புயல் காலங்களில், சென்னை மாநகரம் பெரும் பேரழிவு வெள்ளத்தில் சிக்கியது.

அந்த பேரழிவில் இருந்து தக்க பாடத்தை கற்றுக்கொண்டு, சென்னையை சிறந்த ஒரு மாநகரமாக கடந்த அதிமுக அரசு கட்டமைத்திருக்க வேண்டும். குறிப்பாக, 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், சென்னை மாநகரம் சந்தித்த இழப்பும், உயிர் பலியும் அதிகம்.

அதற்கு பிறகாகவது, சென்னையை சீரமைப்பதற்காக நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான எந்தவொரு திட்டமிடலும், முன்னேற்றமும் இல்லாததால் தான், சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

2015 வெள்ளத்திற்கு பிறகு, சென்னையில் வெள்ளத்தை தடுக்க ரூ.2400 கோடி திட்டம் அறிவித்தீர்களே என்ன ஆயிற்று. அந்த நிதியும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டு அதிமுக ஆட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதும் நியாயமானதே.

மராமத்து பணிகளுக்காக ரூ.5000 கோடியை ஓதுக்கீடு செய்ததாக கூறிய கடந்த அதிமுக அரசு, ஏரிகளை முறையாக தூர்வாரியதா?. நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றியதா?. வடிகால் வாரிய மேம்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை செயல்படுத்தியதா என்றால் பதில் இருக்காது.

முக்கியமாக, மழை வெள்ளத்தால் மனிதர்களைக் காணோம், வீடுகளைக் காணோம், கால்நடைகளை காணோம் என மனித அழுக்குரல்கள் எழுந்தபோதும் கூட, வீராணமா, செம்பரம்பாக்கமா, அம்மாவின் ஆணையின் பேரில்தான் திறக்க முடியும் என்று கூறியவர்கள் தான் அதிமுக வகையாறக்கள்.

முன்னறிவிப்பின்றி வீராணம் ஏரி வெள்ளத்தை நள்ளிரவில் திறந்து விட்டு, மனித உயிர்களையும், வேளாண்மையையும், ஊர்களையும் நாசமாக்கியது அதிமுக அரசு தான்.

அதேபோன்று,  முன்னறிவிப்பின்றி இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் 40 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டு, சென்னையும், அதனை சுற்றியுள்ள நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்ததும் அதிமுக அரசு தான்.

கோடைக்காலங்களில் குடிக்கத் தண்ணீரின்றி தவிக்கும் சென்னை நகரத்தில், வெள்ளம் சூழ்ந்து மனித உயிர்களைக் குடித்த கொடுந்துயரங்களெல்லாம் அதிமுக ஆட்சி காலத்திலேயே அரங்கேறியது.

இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் கடந்த அதிமுக அரசை குத்திக் காட்டுவதற்கு அல்ல, வெள்ளத்தில் இருந்து சென்னையை பாதுகாப்பதாக கூறி பெரும் தொகையை ஒதுக்கியும், எந்த கட்டமைப்பையும் உருவாக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான்.

எனவே அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க விசாரணை குழு அமைப்பதாக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது வரவேற்தக்கது.

அதே நேரத்தில், சாக்கடைகளாக மாறியுள்ள கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கான்கீரிட் கட்டிடங்களாக மாறியுள்ள ஏரி, குளங்களை மீட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அடைமழை அதிகரித்து ஏரிகளில் வெள்ளம் வேகமாக நிரம்பி வருவதை உணர்ந்து, சீராகத் தண்ணீரை முன்கூட்டியே வெளியேற்றிவிடும் அறிவுக் கூர்மையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கைக்கு, ஒத்துழைப்பு நல்குவதாக கூறியுள்ள ஒன்றிய அரசு, அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.