போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனம் மீட்பு-சந்தேக நபர்களில் இருவர் கைது…
போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக பயணித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் குறித்த தப்பி சென்ற டிபெண்டர் வாகனம் வெள்ளிக்கிழமை(18) இரவு கைவிடப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு பாரம் தூக்கி ஒன்றின் உதவியுடன் எடுத்து செல்லப்பட்ட நிலையில் அதே நேரம் தப்பிச்சென்றவர்களில் இரு சந்தேக நபர்கள் அதிகாலை கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது அப்பகுதியில் பதற்ற நிலையை தோற்றுவித்ததுடன் காரைதீவு பிரதேசத்தில் இருந்து கல்முனை நோக்கி டிபெண்டர் வாகனம் அதி வேகமாக பயணித்துள்ளது.இதன்போது அப்பகுதியில் வீதி பாதுகாப்பு கடமையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் போக்குவரத்து பொலிசார் நின்றுள்ளனர்.அவர்கள் மிக வேகமாக அவ்வழியாக வந்த டிபெண்டர் வாகனத்தின் போக்கினை அவதானித்து நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
எனினும் போக்குவரத்து பொலிசாரின் வாகனத்தினை வேகமாக வந்த டிபெண்டர் வாகனம் மோதிவிட்டு தொடர்ந்தும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியின் ஊடாக அதி வேகமாக பயணம் மேற்கொண்டு சென்றுள்ளது.
இவ்வாறு சென்ற டிபெண்டர் ரக வாகனத்தை பின்தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியில் வைத்து இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் டிபெண்டர் வாகனத்தை மீட்டனர்.எனினும் குறித்த வாகனத்தில் வந்தவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த கல்முனை பொலிஸ் தலைமைப் பீட பொறுப்பதிகாரி எம்.ரம்சீம் பக்கிர் தலைமையிலான குழுவினர் அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து டிபெண்டர் வாகனத்தினை பாரம் தூக்கி இயந்திரத்திரத்தின் உதவியுடன் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இவ்வாறு டிபெண்டர் வாகனத்தில் இருந்து தப்பி சென்றவர்களில் இருர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் அண்மையில் வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்திருந்தமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கைதான இரு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கல்முனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை