தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு : பேராளர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !!

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க  கோரியுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருக்கும் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, ஏப்ரல் 9ம் நாள் சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழர் தோழமைக் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன், திரு.பொன்னையன், திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன், தோழர் அ.சா.உமர் பாருக், தோழர் திருமுருகன் காந்தி, திரு.தி.வேல்முருகன், தோழர் கொளத்தூர் மணி, திரு.உ.தனியரசு, தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் சுப.உதயகுமார், தோழர் மீ.த.பாண்டியன், போராசிரியர் ராமு மணிவண்ணன், தோழர் சிங்கராயர், தோழர் செந்தில், திரு.இலயோலா மணி, தோழர் கு.இராமகிருட்ணன், தோழர் தியாகு, திரு.பாரிமைந்தன், திரு.அய்யாத்துரை தமிழினியன், திரு.அரவிந்த ஆகியோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.

இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் போட்டிக்களம் கூர்மையாகி வரும் இவேளையில், நடைபெறும் இம்மாநாடு முக்கியமானதொன்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டினை மையப்படுத்தி ஐந்து முக்கிய கோரிக்கைகளையும் மாநாட்டு பேராளர்களை நோக்கி முன்வைத்துள்ளது.

⦁ தமிழ்நாடு, ஈழத்தமிழ் தாயகம், புலம் என மூன்று புள்ளிகளுக்கும் அமைப்புக்களுக்கும் இடையில் ஓர் உறவினை உருவாக்கி, ஈழவிடுதலை சார்ந்த்து முத்தரப்பும் இணைந்து செயற்படுவதற்கான ஒர் தளத்தினை உருவாக்க வேண்டுகின்றோம்.

⦁ சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா வழங்குகின்ற உதவிகள், தொடர்பில் தமிழ்நாட்டு அரசினை ஓர் தரப்பாக ஏற்றுக் கொண்டு அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி, ஈழத்தமிழ் நலன்சார்ந்த முன்உத்தரவாதத்துடன் நிதியுதவினை இந்திய ஒன்றிய அரசு வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம்.

⦁ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழ்மக்கள் அமைதிவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், போரின் ஓய்வுக்கு பின்னரும் தனது இராணுவத்துக்கு கட்டுக்கடங்காத வகையில் சிறிலங்கா செலவிட்டு வருகின்றமை இந்தியாவை நோக்கியதாகவே கருதவேண்டியுள்ளது.


பொருளதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதார நெருக்கடிகளுக்கு தோழமையுடன் உதவிசெய்யும் நோக்கில் சிறிங்காவுக்கு மனித நேய உதவிகளை வழங்கி வரும் இந்தியா, சிறிலங்காவின் இந்த இராணுவ செலவீனங்கள் எதற்காக என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவத்தினை முற்றாக விலக்குவதற்கான அழுத்தத்தினை இந்தியா கொடுப்பதற்கான தூண்டுதலை தமிழக மக்களும், தமிழக அரசும், கட்சிகள், அமைப்புக்கள் முன்வைக்க வேண்டுகிறோம்.

⦁ அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை ஆகிய விடயங்கள் தொடர்பில் தமிழ்நாட்டு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு செயலாக்கம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசுக்கு உந்துதலைக் கொடுத்து, அதற்கான உயர்மட்ட குழுவொன்றினை நியமிக்க கோர வேண்டுகிறோம்.

⦁ எதிர்வரும் செப்ரெம்பர் மாதம், தமிழினப்படுகொலைக்கான சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கு, சர்வதேச நீதிப்பொறிமுறையினை நோக்கியதான ஓர் தீர்மான வரைவொன்றினை தமிழ்நாட்டு அரசு சார்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்த வேண்டுகின்றோம்.

என கோரிக்கைகள் அமைந்துள்ளதோடு, மேலும் தனது வாழ்தறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழவிடுதலைப் போராட்ட தடத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என விரிந்து பரந்த இத்தோழமையும் உறுதுணையும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கான உந்துசக்திகளில் ஒன்றாக இருந்துள்ளது.
2009ம் ஆண்டு பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு உலகத்தமிழர்களின் உறுதுணை என்பது முக்கியமானதாக காணப்படுகின்றது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கான அரசியல்வெளி முழுமையாக இல்லாது போயுள்ள நிலையில், தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இருந்த நடைமுறைத் தமிழீழ அரசு அழிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்சியாக தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்தி, அதன்வழி சுதந்திரமும் இறைமையும் கொண்டு தமிழீழத்தினை வென்றைடைய, உலகத்தமிழ் மக்களின் பலமே பெரும் சக்தியாக காணப்படுகின்றது. குறிப்பாக இப்பலத்தில் தமிழ்நாட்டின் வகிபாகம் என்பது முக்கியமானது.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய ஒன்றிய அரசின் அயலுறவு கொள்கை நிலைப்பாட்டில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.