இந்தியா- ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையே பேச்சுவார்த்தை: இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கூட்டு ராணுவ செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இரு நாட்டு கடற்படைகள் அதிகாரிகளுக்கு இடையிலான மூன்று நாள் (ஏப்ரல் 11-13) பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடந்து முடிந்திருக்கிறது.
அதே சமயம், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கடற்படையின் தொலைத்தூர ரோந்து விமானமான P8I ஆஸ்திரேலியாவின் P8 விமானத்துடன் இணைந்து கூட்டு கடல்சார் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளது. கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தும் விதமாக எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை (Anti-Submarine Warfare) கண்காணிக்கும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“கடல்சார் நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை உறுதிச்செய்யும் வகையில் இருநாட்டு தரப்பும் ஒத்துழைப்பு, கூடி இயங்குதலை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது,” என இந்திய கடற்படை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கடற்படையின் துணைத்தலைவர் கிறிஸ்டோபர் சிமித் மற்றும் இந்திய கடற்படை பணியாளர்களின் (வெளிநாட்டு ஒத்துழைப்பு- உளவுத்துறை) உதவித் தலைவர் சிங் ஆகிய இருவரும் இப்பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினர்.
கடந்த மாதம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல நாடுகள் பங்கேற்ற கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படை பங்கேற்று இருந்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் ‘குவாட்(QUAD)’ எனும் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை