மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022.

 

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.

அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத்தேசியக் கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. ரவிகிருஸ்ணா அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உரித்துடையவர்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.

நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுமீட்டி நினைவுரையினை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து அண்மையில் தாயகத்தில் அமரத்துவமடைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் அவர்களின் நினைவுகளைச்சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையினை செயற்பாட்டாளர் திரு. ரகு அவர்கள் வாசித்தார்.

தொடர்ந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய “நான் கண்ட தமிழீழம் முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் பின்பும்” என்ற நூலின் அறிமுகஉரையை செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அன்னை பூபதி ஞாபகர்த்தமாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெறும் பொதுஅறிவுப்போட்டி நடைபெற்றது. பொது அறிவுப்போட்டியை பாரதிதமிழ்ப்பள்ளி வளாக முதல்வர்களில் ஒருவரான திரு சத்தியன் அவர்கள் நெறிப்படுத்தினார். பொதுஅறிவுப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன் அணிகளாக பிரிந்து பங்காற்றியதில், பாண்டியன் அணியினர் வெற்றிபெற்றனர். போட்டியில் பங்கெடுத்த 3 அணிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், மாமனிதர்களின் குடும்ப உறுப்பினர்களினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பங்கெடுத்த பார்வையாளர்களுக்கிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய 3 உறவுகளுக்கு, அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்தேசியசெயற்பாட்டாளர்  சண்முகம் சபேசனின் ”காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்” புத்தகங்கள் பரிசல்களாக வழங்கப்பட்டதுடன், மெல்பேர்ன் இளையோர் ஒருவர் வரைந்த பூபதி அம்மாவின் வரைபடமும், மண்டப நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, வரயிருக்கும் சமூகநிகழ்வுகளின் அறிவிப்புகளின் பின், தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதிமொழியுடன் இரவு 8.05மணியளவில் 2022-ம் ஆண்டிற்கான தமிழீழ நாட்டுப்பற்றாளர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.